சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இதுவரை தனித்து போட்டி என கூறிவந்த கமல் தற்போது கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். கமல் ரஜினியோடு இணைவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களைப் பொறுத்தவரை அதிமுக மாபெரும் இயக்கம். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுகதான் ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் அதிமுகவை விட வலிமைப்பெற்ற சக்தி எதுவும் இல்லை.

கமலுடைய ‘விஸ்வரூபம்’ படத்துக்கு சிக்கல் வந்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்? கமல் உள் ஒன்று வைத்து பேசி வருகிறார். எம்.ஜி.ஆரின் நீட்சி என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர். வாக்குகளை வாங்க நினைத்தால் அது அவருக்கு கானல் நீராகதான் போகும். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள், வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்காது.  மற்ற கட்சிகள் எம்.ஜி.ஆரை எப்படி சொந்த கொண்டாட முடியும்? அப்படி மற்ற கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமும் 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். அதுதான் நடக்கும்.
கமல் தற்போது பலவீனமாக இருக்கிறார். திமுகவும் பலவீனமாக இருக்கிறது. எனவே இரண்டு பலவீனங்கள் ஒன்றிணைந்து இமயமலையோடு மோதப் பார்கிறார்கள். இமயமலையோடு மோதினால் மன்டைதான் உடையும். தேர்தலில் மூன்றாவது, நான்காவது அணிகூட வரலாம். ஆனால் முதல் அணியாக அதிமுகதான் இருக்கும். திமுக ஒரு பச்சோந்தி போல் தங்கள் நிறத்தை அடிக்கடி மாற்றி வருவகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்தது திமுகதான்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.