’ஊழல் பொதி’ என்று தன்னால் விமர்சிக்கப்பட்ட தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில் கமல் கைகோர்த்தே விட்டார்! என்று உறுதியான தகவல்கள் உலா வருகின்றன. வெறும் ஒத்த சீட்டுக்காக மொத்த கொள்கைகளையும் கமல்ஹாசன் குழிதோண்டி புதைத்துவிட்டதாக குமுறுகின்றனர் அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள். 

அதாவது கட்சி துவங்கிய பின் ராகுலை டெல்லியில் சந்தித்தார் கமல்ஹாசன். அபீஸியலாக நடந்த இந்த சந்திப்பை அவர்களுக்கு இடையிலான இரண்டு அன் அபீஸியல் சந்திப்புகள் பின் தொடர்ந்ததாம். விளைவு, ராகுலின் மனதில் அணையா விளக்காய் ஐக்கியமாகிவிட்டார் கமல். தங்கள் கூட்டணியில் கமல் நிச்சயம், ‘பண விஷயத்தில் மோசமான நபர்’ எனும் பெயரெடுக்காத இவர் தங்களின் கூட்டணியில் இருந்தால் மாநிலம் முழுவதும் கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்! என்பது  ராகுலின் கணக்கு. 

இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் துவங்கிய நிலையில் கமலிடம் ராகுல் தரப்பு பேசியது. அதற்கு கமல் வைத்த நிபந்தனைகள் ‘நான் தி.மு.க.வின் கூட்டணி எனும் குடைக்குள் வரமாட்டேன், நீங்கள்தான் எங்களுக்கு சீஃப்! அதேபோல் மூன்று தொகுதிகள் வேண்டும்.’ என்பதுதான். இதைக்கேட்டு அரண்டு போனவர்கள் ராகுலிடம் ஒப்புவித்துள்ளார்கள். பின் கமல் - ராகுல் பேச்சுவார்த்தை நடந்ததாம், அதன் படி கூட்டணியின் எல்லா மீட்டிங்குகளுக்கும் கமல் வர தேவையில்லை, ஆனால் ஒரேயொரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும். காரணம் தங்களுக்கு தி.மு.க. ஒதுக்கும் தொகுதிகளில்தான் ஒன்றை விட்டுக் கொடுக்க முடியுமென ராகுல் சொல்லியிருக்கிறார். 

பின் வரும் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிகளவு பெற்றுத்தருகிறேன், முடிந்தால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கூட தருகிறோம் எனுமளவுக்கு ராகுல் உறுதி தந்திருக்கிறர். நீண்ட யோசனைக்கு பின் கமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம். கமலைப் பொறுத்தவரையில் வெற்றிக் கூட்டணியில் இணைந்ததும், எதிர்கால அரசியலுக்கு இந்த பதவிகள் உதவுமென்பதும், ராகுலின் நட்பு மிக முக்கியமென்பதும் பாதி வெற்றியாக பட்டிருக்கிறது. ஆனாலும் கன்வின்ஸ் ஆகாத அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ‘என்னதான் காங்கிரஸின் சீட்டை நமக்கு தந்திருந்தாலும், காங்கிரஸின் கூட்டணி தலைமை தி.மு.க.தான். ஊழல் கட்சி என்று திட்டிவிட்டு அவர்களிடமே போய் நிற்பதை மக்கள் எப்படி ஏற்பார்கள்?’ என்று வாதிட்டுள்ளனர். ஆனாலும் பயனில்லை. 

இந்நிலையில், கமலுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்ததை ஸ்டாலின் விரும்பவில்லை. ‘யாரை கேட்டு முடிவு செய்தீர்கள்? இங்கு நான் கூட்டணி தலைவரா இல்லை காங்கிரஸா?’ என்று குதித்தாராம். ஆனால், ராகுலின் பிரதிநிதிகளோ...’தளபதி சார், நாம கமலுக்கு கொடுக்குறது ஒரேயொரு சீட். ஆனா நாற்பது தொகுதிகளில் இருந்து அவரோட ரசிகர்களின் வாக்குகளும், அவரை நம்பும் பொதுமக்களின் வாக்குகளும் நமக்குதான் விழும்.’ என்றார்களாம். ஸ்டாலினுக்கு இந்த அப்ரோச்மெண்ட் பிடித்திருந்தது. 

இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமையன்று கமலும், ஸ்டாலினும் ரஜினி வீட்டு கல்யாணத்தில் சந்தித்தனர். அருகருகே அமர்ந்தனர், அகம் மகிழ பேசினர்...நட்பு புதுப்பிக்கப்பட்டுவிட்டது... என்கிறார்கள். அறிவாலய மற்றும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் இந்த தகவல் தெளிவாகவே சிறகடித்து பற்க்கிறது. ஆனால் நம்மவர் கோஷ்டியோ இன்னும் வெளிப்படையாக மூச்சு விடவில்லை. ஸ்டாலினிடம் ஒரு கேள்வி....’காகித பூவான கமல் இப்போது மணக்கிறாரா என்ன?’