Stalin join hand with EVKS and Kushboo against Thirunavukarasar

கருணாநிதியை மோடி வந்து சந்தித்தாலும் சந்தித்தார் , அதன் பின் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்குள் மிக மோசமான மோதல் மேகம் உருவாகி நிற்கிறது. 
மோடியின் கோபாலபுர விசிட்டை தி.மு.க. பெரிதளவில் பப்ளிசிட்டி செய்தது! இதை தமிழக காங்கிரஸ் விரும்பவில்லை. தங்களை கூட்டணியிலிருந்து கழட்டிவிடத்தான் ஸ்டாலின் இதையெல்லாம் செய்கிறார் என்று வெளிப்படையாகவே வெடிக்கின்றனர். இது போதாதென்று ஸ்டாலினுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் பொதுவாகவே ஆகாது.

அரசர், அ.தி.மு.க.வின் ஆதரவு நபராக இருக்கிறார் என்பது ஸ்டாலினின் கோபம். ஆக இருவருக்கும் இடையில் சாதாரணமாகவே மோதல் நிலை இருந்த சூழலில் மோடி விசிட்டின் பின் அது மேலும் வலுப்பெற்றுள்ளது. இது போதாதென்று பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான கண்டன கூட்டம் நடத்தும் விவகாரத்திலும் ஸ்டாலின் - அரசர் இருவருக்குமிடையில் முட்டல் அதிகரித்திருக்கிறது. 

இந்த சூழலை பயன்படுத்தி அரசரை காலி செய்துவிட்டு தான் மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் வந்தமர ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முயல்கிறா என்று ஒரு தகவல் பரபரக்கிறது. இளங்கோவனின் இந்த முயற்சிக்கு முகுல் வாஸ்னிக் மூலமாக குஷ்புவும் வலு சேர்க்கிறார் என்கிறார்கள். காரணம், குஷ்பு இளங்கோவனின் ஆதரவாளர் என்பதால் அவரை அரசர் மதிப்பதில்லை என்பதே காரணம். 

இந்த சூழலில் அ.தி.மு.க. ஆதரவு அரசரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால் காங்கிரஸுடன் கூட்டணியை தொடர தங்களுக்கு எந்த தயக்கமுமில்லை எனும் ரீதியில் ஸ்டாலின் தரப்பினர் சிலர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியிருப்பதாகவும் பேசப்படுகிறது. 

இதன் விளைவாக அரசருக்கு எதிராக இளங்கோவனின் டீம் ஒரு பெரும் புகார் பட்டியலை சோனியாவின் பார்வைக்கு அனுப்பியுள்ளனராம். இதை ஸ்மெல் செய்துவிட்ட அரசர் அண்ட்கோ, இளங்கோவன் தலைவராக இருந்தபோது கட்சி நிதியை பயன்படுத்தியதில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஒரு புகாரை ராகுலின் பார்வைக்கு அனுப்பியுள்ளராம். 

இந்த ரெண்டு புகாரில் எது வெடிக்கும், எது புஸ்வாணமாகும், யார் வெல்வார், யார் மடங்குவார்? என்பதெல்லாம்தான் தமிழக காங்கிரஸை இப்போது படுத்தியெடுக்கும் கேள்விகள் என்கிறார்கள் விமர்சகர்கள்.