ஆளுநரின் ஆய்வை எதிர்ப்பதற்கு சிறை தண்டனை என்று மிரட்டுவதற்கு அஞ்சி எதிர்ப்பை கைவிட முடியாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட வாரியாக ஆய்வு செய்வதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. மேலும் ஆளுநர் ஆய்விற்கு செல்லும் மாவட்டங்களில் எல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

அண்மையில் ஆளுநர் நாமக்கல் சென்றபோது கருப்பு கொடி காட்டிய திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுகவினர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஆளுநருக்கு மாநிலத்தின் எந்த பகுதிக்கு செல்லவும் அதிகாரம் உள்ளது. அரசு அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்கு ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை. ஆளுநரின் செயல்பாடுகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. 

இந்நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. 

சட்டமன்றம் கூடியதும் நேரமில்லா நேரத்தின் போது ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். ஆனால் விதி எண் 92(7)ன்படி ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துவிட்டார். 

ஆளுநரின் ஆய்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மிரட்டும் தொனியில் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. ஆயுள் முழுதும் சிறையில் அடைத்தாலும் சரி.. ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் தொடரும். மாநில சுயாட்சிக்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்ய திமுகவினர் தயார் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.