கடந்தமுறை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது எனவும், திமுகவுக்கு இனி யாரும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி கூறியுள்ளார்.

சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் தெற்கு பகுதி கழகம் சார்பில் பள்ளிக்கரணையில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி கந்தன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள போலியான வாக்காளர்களை கண்டறிந்து அவற்றை நீக்கும் பணிகளில் நமது பாக முகவர்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும். வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதேபோல் அதிக வாக்காளர்களைக் கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியை நம் கழகத்தின் கோட்டையாக்க வேண்டும்.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்ற திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும்  மக்கள் மத்தியில் எடுபடாது. இனி யாருமே திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என்பதில் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். நமது புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோல தனக்குப் பின்னும் நூறு ஆண்டுகளுக்கு கழகம் ஆட்சி புரியும் என்று கூறிய அந்த பொன்னான வார்த்தைகளை நாம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.