திமுக ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில் ஆண்டுக்கு நூறு கூட்டங்களையாவது நடத்த வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில் ஆண்டுக்கு நூறு கூட்டங்களையாவது நடத்த வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்து முதல் முறையாக முதலமைச்சர் என்ற அரியாசனத்தில் அமர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், தொடக்கம் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக திமுக ஒரு இந்துவிரோத கட்சி என்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை உடைக்க ஸ்டாலின் முன்னுரிமை அளித்து வருகிறார்.

அந்தவகையில் கோயில்கள் புனரமைப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, ஆலயங்களில் மூன்று வேளையும் அன்னதானம் என இந்துசமய அறநிலையத் துறையும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள், கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

திமுக-வை எப்போதும் கடுமையாக விமர்சிக்கும் பா.ஜ.க.-வின் எச்.ராஜா, தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும், 100 நாட்களுக்கு இந்த அரசை விமர்சிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் புதிய அரசு பொறுப்பேற்று 4 மாதங்களை கடந்துவிட்ட நிலையில் திமுக மீதான விமர்சனங்களை அடுத்தடுத்து வீசி வருகிறார் எச்.ராஜா.

இந்தநிலையில் தமது பிறந்தநாளையொட்டி எச்.ராஜா, டுவிட்டர் ஸ்பேஸில் அக்கட்சியினருடன் உரையாடியுள்ளார். அப்போது அவர் பேசிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதில், திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ள எச்.ராஜா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். ஆண்டுக்கு 100-க்கும் அதிகமான கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எச்.ராஜாவின் பேச்சுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக-வின் தோழமை கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் எச்.ராஜா, போன்றோருக்கு ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் தான் என்றும் உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.