திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவில் வாசலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. புன்னர் கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம் அருகே பிராமணர் சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, அடுத்த முறை வரும்போது நீங்கள் முதலமைச்சராகத்தான் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். இதையடுத்து கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  அவர்  ஸ்ரீரங்கம் புறப்பட்டார். திருமண மண்டபத்துக்கு செல்லும் முன் மு.க.ஸ்டாலின் வந்த கார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ரெங்கா, ரெங்கா கோபுரம் முன்பு நிறுத்தப்பட்டது.

அப்போது அங்கு ஏற்கனவே பூஜை நடத்திய மாலை மற்றும் பொருட்களுடன் ரெங்கநாதர் கோவிலின் தலைமை பட்டர்களில் ஒருவரான சுந்தர் நின்று கொண்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கியதும் அவருக்கு பட்டு சால்வையை சுந்தர் பட்டர் அணிவித்து வரவேற்று நெற்றியில் பொட்டு வைத்தார். பின்னர் ஒரு மாலையை எடுத்து யானையிடம் கொடுத்தனர். யானை அந்த மாலையை மு.க.ஸ்டாலினுக்கு அணிவித்து ஆசீர்வாதம் வழங்கியது. அப்போது மு.க.ஸ்டாலின் அந்த யானைக்கு கரும்பு துண்டுகள், வெல்ல கட்டிகளை வழங்கினார்.

இதையடுத்து  ரெங்கநாதர் கோவிலின் கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம்  பகுதிக்கு வந்த  ஸ்டாலினுக்கு பிராமணர் சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அடுத்தமுறை நீங்கள் முதலமைச்சராக  வரவேண்டும் என வாழ்த்தினர்.

அப்போது ஸ்ரீரங்கம் கோவில் பகுதியில் உள்ள அடிமனை பிரச்சினைக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இதுபற்றி சட்டமன்றத்தில் நீங்கள் பேசி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என  பிராமணர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாத்திகரான ஸ்டாலின் கோவிலுக்கு சென்றதை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கிண்டல் செய்த நிலையில், ஸ்டாலின் அனைத்து மதத்தினருக்குனு மதிப்பு தருபவர் என திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.