தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்..! எடப்பாடி புகாருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..! வெளிநடப்பு செய்த அதிமுக
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை முதலமைச்ர் மு க ஸ்டாலின் பட்டியலிட்டு விமர்சித்தார்.
பெண் காவலருக்கு பாதுகாப்பு இல்லை
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேரம் இல்லாத நேரத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்தார். இப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் பொத்தாம் பொதுவாக பேசாமல் ஆதாரத்துடன் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அழுது கொண்டே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை பைசல் செய்ய திமுகவினர் சமாதானம் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள், அது முடியவில்லை.
72 மணி நேரத்தில் கைது
பாலியல் தொல்லை கொடுத்தவர்களை காவல்துறையில் புகார் கொடுத்தும் கைது செய்யவில்லை. இரண்டு நாள் ஆகியும் கைது செய்யவில்லை.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் காவலர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நமக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலை வருகிறது. ஒரு சாதாரண மக்கள் தருகிற புகாருக்கு நடவடிக்கை எடுக்குமா? என மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், விருகம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் புகார் கொடுத்த அன்றே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்கள்
புகார் கொடுத்த 72 மணி நேரத்தில் எந்த வழக்கிலாவது குற்றவாளிகளை அதிமுக ஆட்சியில் கைது செய்து இருக்கிறார்களா? பெண்களுக்கு எதிராக யார் குற்றம் செய்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பரமக்குடி துப்பாக்கி சூடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர் வில்சன் துப்பாக்கி சூடு மரணம், கன்னியாகுமரி மாவட்ட ஸ்டெர்லைட் லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவகாரம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம்,சாத்தான்குளம் காவல் நிலைய தந்தை மகன் உயிரிழப்பு என அடுக்கடுக்காக அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியைப் பொருத்தவரை பெண்கள் குழந்தைகள் என யார் அவர்களிடம் தவறு செய்தாலும் அரசியல் பாரபட்சமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆட்சியில் நடைபெற்றது போல இந்த ஆட்சியில் ஏதாவது நடைபெற்றது உள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து இபிஎஸ் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்
சனாதன தர்மம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது-ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு