ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு.!சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து கெத்து காட்டும் அதிமுக
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரை மீண்டும் நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு இபிஎஸ் தலைமையலான அணியினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்
அதிமுகவும் அதிகார மோதலும்
அதிமுகவில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் நியமிக்க கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கையொப்பமிட்ட கடிதம் பேரவை தலைவர் அப்பாவுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்க்கு போட்டியாக ஓபிஎஸ் அணியும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதனையடுத்து இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்காத நிலையில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தை இபிஎஸ் தலைமையிலான் அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து இருந்தனர்.
மீண்டும் கோரிக்கை வைத்த இபிஎஸ் அணி
இதனையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று முன் தினம் தொடங்கியது. அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு அருகருகே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று சட்டப் பேரவை கூடுவதற்கு முன்னதாக மீண்டும் அதிமுக சட்டப்பேரவை கொறடா எஸ்பி வேலுமணி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக பேரவை தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்கி தருமாறு பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தி இருந்தனர்.அதற்க்கு பேரவை தலைவர் பரிசீலிப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வந்த இபிஎஸ் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் கூறுகையில், சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளதாகவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்