Asianet News TamilAsianet News Tamil

நாளை கன்னியாகுமரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்… மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு!! | CMStalin

#CMStalin | மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin goes kanniyakumari tomorrow to inspect flood
Author
Chennai, First Published Nov 14, 2021, 1:05 PM IST

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் மக்கள் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மருத்துவமுகாம்களை நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் நேற்று 5000 இடங்களில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை வில்லிவாக்கத்தில் மழைக்கால மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து திரு.வி.க நகர், கொளத்தூர் உள்ளிட்ட 18 பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

stalin goes kanniyakumari tomorrow to inspect flood

அப்போது கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து தான் வேலை செய்வதாக தெரிவித்தார். மேலும் எதிர்கட்சிகளின் விமர்சனத்தை பொருட்படுத்துவதில்லை என்றும் பயிர்பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிந்தவுடன் கடந்த ஆட்சியில் முறைகேடுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை உறுதி என்றும் அவர் தெரிவித்தார். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்வதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோரவுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

stalin goes kanniyakumari tomorrow to inspect flood

அப்போது 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கு தலா ரூ.2,10,000க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000, கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களையும், வெள்ளப் பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios