டெல்லியை கண்டு பயப்படும் திமுகவால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பே இல்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நிர்வாகிகள் கட்சி மாறுவதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை. தங்க தமிழ்செல்வன்னுடன் அவரது உறவினர்கள் மட்டுமே திமுகவில் இணைந்துள்ளனர். அமமுகவினர் அல்ல. தொண்டர்களை நிர்வாகிக்கக் கூடியவர்களே நிர்வாகிகள். அந்தப் பொறுப்பே தலைமை கொடுப்பது தான். எங்களை லெட்டர்பேடு கட்சி என சொல்பவர்கள் தான் எங்கள் கட்சியினரை வாங்க வாங்க என அழைக்கின்றனர். ஆக அதிமுக, திமுகவில் நிர்வாகிகள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 90 சதவிகித அமமுகவினர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். 

12 ஆண்டுகள் நான் பணியாற்றிய மாவட்டம் தேனி. எனக்கு அது சொந்த மாவட்டம் மாதிரி. அந்த மாவட்டத்தில் ஓவ்வொருவரையும் எனக்குத் தெரியும். ஆகையால் அனைவரையும் கலந்து ஆலோசித்து மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம்.  ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவையில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனக் கூறுகிறார். அவர் எவ்வளவு உண்மையாகப் பேசுகிறார் என்பது இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தண்ணீர் பஞ்சத்தை மறைக்கவே எங்கள் கட்சியில் இருந்து ஒரு நிர்வாகி போனதை பூதாகரமாக்குகிறார்கள். 

தங்க தமிழ்செல்வனை பின்னாலிருந்து யாரோ இயக்குவதாக ஏற்கெனவே கூறியிருந்தேன். அது உண்மையாகி விட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட திட்டமே என்னையும், எனது கட்சியையும் டேமேஜ் பண்ணிவிட்டு வரவேண்டும் என்பது தான். அதனால அவர் அப்படி செய்திருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. முன்னுக்கு பின் அவர் சில நாட்களாக பேசியதிருர்ந்த்ந்ந் அவர்யார், அவரது தரம் என்ன? அவர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்கு தெரிய வந்துள்லது. 

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறிய ஸ்டாலின் பிறகு பின் வாங்கி விட்டார். நான் கேள்விப்பட்டது டெல்லியிலிருந்து திமுகவுக்கு மிரட்டல் வந்ததால் அதிலிருந்து பின் வாங்கி விட்டதாகத் தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை திமுக உருவாக்கும் என எனக்குத் தெரியவில்லை. டெல்லியைக் கண்டு பயப்படுபவர்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பே கிடையாது’’ என அவர் தெரிவித்தார்.