’ஏழு கட்சி பார்த்துவிட்டு வந்த திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் பாரம்பரியம் பற்றி என்ன தெரியும்? இவரை நம்பி எப்படி வாழ்வா சாவா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள?’ சொந்த கட்சியின் மாநில தலைவரை நோக்கி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்ட இந்த கேள்வி மிக முக்கியமானதாக டெல்லிக்கு புரிந்தது. மாற்றப்பட்டார் அரசர்.

இளங்கோவன் வைத்த வேலிட் கருத்துதான் அரசரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிட தூண்டுகோளாக அமைந்தது! என்பது வெளியே பேசப்படும் பேச்சு. ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுக்கு உள்ளேயிருக்கும் முக்கிய நிர்வாகிகளோ, ‘அரசரை ஆண்டியாக்கியது ஸ்டாலின், இளங்கோவன் கூட்டணிதான்.’ என்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் மாற்றத்தில் ஸ்டாலினின் கை எப்படி? என்று விசாரித்தால் வந்து விழும் தகவல்கள்...

“கடந்த ஒரு வருடமாகவே திருமாவளவன், தா.பாண்டியன், வைகோ, ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் ‘ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம்’ என்று முழங்கிக் கொண்டுள்ளனர். இவர்களோடு சேர்ந்து, தி.மு.க. கூட்டணியின் மிக முக்கிய உறுப்பினர் எனும் வகையில் காங்கிரஸின் தலைவரான திருநாவுக்கரசரும் ‘ஆம், முதல்வராக்குவோம்!’ என்று கையை தூக்கி வந்தார். 

ஆனால் உள்ளுக்குள் அரசருக்கு அந்த உணர்வு இருந்ததில்லை. உண்மையில் அவருக்கும் ஸ்டாலினுக்கும் ஒத்துவரவேயில்லை. இன்னும் சொல்வதென்றால் தி.மு.க. கூட்டணியில் இருக்கவே விருப்பப்படவில்லை அரசர். அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இது டெல்லி காங்கிரஸுக்கு போய், அவர்கள் அரசரை அழைத்து ‘ஏன் இப்படி?’ என்று கேட்டபோது, ‘தி.மு.க.வுடன் பி.ஜே.பி. நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சட்டென்று நம்மை கைகழுவினால் வலுவாக பதிலடி கொடுக்கவேண்டும் இல்லையா?’ என்றார்.  

ஆனால் சோனியா, ராகுல் ஆகியோர் அறிவாலய நிகழ்வில் கலந்து கொண்டு, ஸ்டாலின் ‘ராகுல் பிரதமராக வேண்டும்’ என்று சொன்ன பிறகும் மனம் மாறவில்லை அரசர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வை விட்டு  தினகரனிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார் என்று தகவல்கள் வந்தன. கூடவே கமல்ஹாசனையும், பா.ம.க.வையும் கூட்டணிக்குள் கொண்டு வர பார்த்தார். இதெல்லாம் ஸ்டாலினுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூட்டணியின் தலைவனாக தான் இருக்கையில், இவரென்ன புதிதாய் ‘உள் ஒதுக்கீடு’ தருவது போல் தன் தலைமையில் ஒரு கூட்டணி அமைப்பது? என்று பொங்கிவிட்டார். 

ஸ்டாலின் கோபத்தில் இருந்த அதேவேளையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அரசரை வீழ்த்திட போராடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கைகோர்த்தனர் அரசருக்கு எதிராக. ஆனால் ராகுலின் கவனத்துக்கு அரசரை பற்றிய அதிருப்திகளை இளங்கோவனால் நேரடியாக கொண்டு போக முடியவில்லை. இந்த சூழலில்தான் பிரியங்கா காந்தி அரசியலுக்குள் நுழைந்தார். இந்த சூழலில் குஷ்பூ வழியே அவரது கவனத்துக்கு அரசர் மீதான புகார்களை கஷ்டப்பட்டு கொண்டு சென்றார் இளங்கோவன். அது ராகுலின் கவனத்துக்கு போனதாக உறுதியான தகவல் வெளியானது.

 

ஆனாலும் ரியாக்‌ஷன் இல்லை. இந்த சூழலில் பிப்ரவரியும் பிறந்துவிட்டது. இனியும் அமைதிகாத்தால் திருநாவுக்கரசரை வைத்துக் கொண்டு நிம்மதியாக கூட்டணியை தலைமை தாங்கி நடத்திட முடியாது என்று  நினைத்த ஸ்டாலின், ராகுலிடம் தனக்கு இருக்கும் நேரடி செல்வாக்கை பயன்படுத்தி போன் செய்து பேசியே விட்டார். விளைவு அடுத்த சில மணி நேரங்களிலேயே அரசருக்கு எதிரான ஆர்டர் பிரிண்ட் ஆகிவிட்டதாம். 

திருநாவுக்கரசரை தூக்கிவிட்டு கே.எஸ். அழகிரியை நியமித்ததில் இளங்கோவனுக்கு முழு சந்தோஷமில்லை. ஆனாலும் அரசர் இறங்கியதால் ஆறுதலடைந்திருக்கிறார். மிக வலுவான நபரை காங்கிரஸ் தலைவராக ஆக்காததால் தன்னால் எளிதாக அக்கட்சியை இங்கே ஆட்டுவிக்க முடியும் என்பது ஸ்டாலினின் எண்ணம். எனவே இந்த மாற்றம், நியமனம் இரண்டும் அவருக்கு ஹேப்பியே. அழகிரிக்கு மனப்பூர்வமாக வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். ஆக கருணாநிதி மகனும், பெரியார் பேரனும் கைகோர்த்து அரசரை ஆண்டியாக்கிவிட்டார்கள்.” என்கிறார்கள். அவ்வ்வ்....!