காவிரி விவகாரத்தில், பிரதமரை சந்திக்க முதல்வரும் துணை முதல்வரும் நேரம் கேட்கவில்லை என்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கூற்றுக்கு முதல்வரும் துணை முதல்வரும் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையேல் பதவிவிலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில், முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பிரதமரை சந்திக்க முடியாது. ஆனால் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கலாம் என மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாகவும் என்ன செய்யலாம் என முதல்வர் ஆலோசனை கேட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும் பிரதமர் சந்திக்க மறுத்தது தொடர்பாக தொடர்ச்சியாக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதிலும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துவருகிறார்.

ஆனால், முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு பின்னர் பிரதமரை சந்திக்கலாம் என்றுதான் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். ஆனால், பிரதமரை கூட முதல்வரால் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தின் பிரதிநிதியான முதல்வரை சந்திக்க பிரதமர் மறுப்பது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என்றெல்லாம் விமர்சனங்களை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. பிரதமரை சந்திக்க முதல்வர், துணை முதல்வர் நேரம் கேட்டார்களா? அவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்காத நிலையில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சரியல்ல. முதலில் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசிய பிறகு பிரதமரை சந்திக்கலாம் என்பதை மாற்றிக் கூறுவது தமிழக மக்களை முட்டாள்களாக்கும் செயல் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நான்காம் நாள் காவிரி உரிமை மீட்பு பயணத்தின்போது, திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூரில் பேசிய ஸ்டாலின், பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்படவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தவறாக இருந்தால் முதல்வரும் துணை முதல்வரும் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. அது தவறான கருத்தாக இருந்தால் முதல்வரும் துணை முதல்வரும் மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.