ஸ்டாலின்... ஆளுநரையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பாக்கலாமா.? பேசாம ராஜினாமா பண்ணுங்க.. சவுக்கு சங்கர் டுவிட்.
ஆளுநரை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என சவுக்கு சங்கர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஆளுநரை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என சவுக்கு சங்கர் காட்டமாக பதிவிட்டுள்ளார். ஸ்டாலினுக்கு அரசியலும் தெரியல, ஆட்சி நடத்தவும் தெரியல என்றும் அவர் கூறியுள்ளார். திருவள்ளுவர் ஆன்மிகவாதி என்றும், அதனால்தான் அவர் திருக்குறளின் முதல் எழுத்தில் ஆதிபகவன் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ள நிலையில்தான் முதல்வர் ராஜினாமா செய்யலாம் என சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் ஆளுநருக்கும்- தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. நீட் விலக்கு மசோதாவை பரிசீலிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தது மட்டுமின்றி, பல மசோதாக்கள் மற்றும் தமிழக அரசின் கோப்புகளில் கையொப்பம் இடாமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார், இதனால் தமிழக முதலமைச்சர் ஆளுநர் பலமுறை நேரில் சந்தித்து ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார் என்பதை அனைவரும் அறிவர், இது ஒருபுறம் உள்ள நிலையில் ஆளுநரின் பேச்சுக்கள் அடிக்கடி தமிழக அரசையும், தமிழர்களையும் சீண்டும் வகையில் இருந்து வருகிறது.
மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் வகையிலும் அவரின் பேச்சுக்கள் இருந்து வருகிறது, இந்நிலையில்தான் டெல்லியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் திருவள்ளுவர் ஆன்மிகவாதி எனப் பேசியுள்ளார், அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-
திருவள்ளுவர் உள் ஒளி மிக ஆன்மிகவாதி, திருக்குறளின் முதல் குரலில் ஆதி பகவன் என எழுதியிருக்கிறார், ஆதிபகவன் தான் இந்த உலகத்தை படைத்தார், அதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார், ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு போப் திருக்குறளில் உள்ள ஆன்மீக சிந்தனைகளை நீக்கிவிட்டார், மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி யு போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது என அவர் பேசியுள்ளார்.
ஏற்கனவே திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவி உடுத்தி, அவருக்கு மத சாயம் பூசி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி திருவள்ளுவர் ஆன்மிகவாதி என பேசியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இக்கருத்தை மேற்கோள்காட்டி பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அளுநரையும், தமிழக முதல்வரையும் விமர்சித்து காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த ஆளை எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க, ஸ்டாலின் பேசாம ராஜனமா பண்ணிடுங்க, அரசியலும் தெரியல, ஆட்சி நடத்துவோம் தெரியல என பதிவிட்டுள்ளார்.