திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் புரிந்தவர்களுக்கு ரஜினியின் நேர்மையான அரசியல் புரியாது என அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்’’ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, அவர் கட்சி ஆரம்பித்து இப்போ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர் என்று கேட்டால் பதில் இல்லை.

அரசியலில் எதிர்மறை அரசியல் ஒன்று உள்ளது. அதே போல் நேர்மறை ஒன்று உள்ளது. இதை கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது. முக்கியமாக மாணவர்கள். திமுக எதிர் கட்சி மற்றும் 21 தொகுதிகளில் எம்.பிக்கள், 100க்கும் மேல் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் தினமும்? வெறும் போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் ஒரு தீர்வு தேடுவதை விடப் போராட்டம் நடத்தி வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் ரஜினி அவர்களும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஒரு மக்கள் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு தேடும் தலைவன் போராட்டம் நடத்தலாம் என்று குதிக்கும் முன் தீர்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.
அந்த பிரச்சனையை எப்படி இன்னும் பெரிதாக்கி மக்களை கதறவிட்டு அதில் வெறுப்பு அரசியல் செய்யலாம் என்று துடிக்கும் திமுக தலைமையின் அணுகுமுறை சரியா? இல்லை தண்ணீர் இல்லையா இதோ இல்லாத தண்ணீர் பற்றக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் கொடுக்கலாம், வசதி வாய்ப்பில்லாத பள்ளிகளை முடிந்த அளவு சரி செய்து கொடுக்கலாம், கொசுத் தொல்லையால் வியாதி பரவுகிறது என்றால் மருந்தடிக்கலாம், டெங்குகாய்ச்சல் பரவுகிறது அதைத் தடுக்க கசாயம் மக்களுக்குக் கொடுத்து உதவலாம். இப்படித் தீர்வு தேடும் ரஜினி மன்ற நடவடிக்கைகள் சரியா?

மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் மக்கள் , மாணவர்கள் அனைவரும்? இதே கொளத்தூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம் ஸ்டாலினின் சொந்த தொகுதி தானே! அந்த தொகுதியில் 1.பள்ளிகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொடுத்தது ரஜினி சார். அவர் வழிகாட்டியபடி செயல்படும் சந்தானம் அவர்கள்.

2.அதே தொகுதியில் கொசு மருந்து அடிப்பது ஆரம்பித்து டெங்குகாய்ச்சல் பரவுவதைத் தடுக்க கசாயம் கொடுப்பது வரை கடந்த 3 நாட்கள் முன் வரை கூட மக்கள் சேவையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடும் ரஜினி மக்கள் மன்றம் செய்யும் இந்த சேவை மக்கள் சேவையா? இல்லை அந்த மக்களைப் போய் தூண்டிவிட்டுவிட்டு வெறுப்பு அரசியல் பேசி திரியும் திமுக தலைமை செய்வது சரியா?

இது போல் இந்த கொளத்தூர் தொகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நலத்திட்ட வேலைகளை செய்து கொடுத்துள்ளர் ரஜினி. ஸ்டாலின் உங்கள் சொந்த தொகுதி தானே, அதுவும் இரண்டு முறை தேர்வானவர். எங்கே காட்டுங்கள் பட்டியலிடுங்கள் பார்க்கலாம். திமுக என்ன செய்தார்கள்? அந்த பள்ளி சீரமைத்துக் கொடுத்த தகவல் மக்களுக்குச் சென்று எங்கே ரஜினி பெயர் கிடைத்துவிடுமோ என்று அந்த அடையாளத்தை அழிக்க முற்பட்டார்கள்.

இதே கொளத்தூர் தொகுதியில் சுமார் 100 நாட்கள் மேலாகப் பல லட்சம் லிட்டர் தண்ணீரை மக்களுக்கு வினியோகம் செய்து மக்கள் தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்தவர் ரஜினி ஆதரவாளரான சந்தானம். ஆனால் ஸ்டாலின் செய்தது என்ன? குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று போராட்டம் நடத்த மக்களைத் தூண்டிவிடுவது தான் அவர் செய்த அரசியல்.

சாராய ஆலைகளை நடத்தி அங்கே இருக்கும் மக்கள் தண்ணீரை உறிஞ்சு வெளி நாடுகளுக்கும் சாராய ஏற்றுமதி செய்யும் திமுககாரர்கள் என்ன செய்தார்கள்? குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று போராட்டம். உன் சாராய ஆலைக்குப் போகும் தண்ணீரை நீங்கள் மக்களுக்குக் கொடுத்தாலே தண்ணீர் பிரச்சனை வராதே..

ஆக மக்கள் சொல்லுங்கள் தீர்வு தேடுபவன் தலைவனா ? இல்லை எப்போட எங்கேடா மக்களுக்குக் கஷ்டம் வராது அதை வைத்து அரசியல் லாபத்திற்குப் போராட்டம் தூண்டலாம் என்று திரிபவன் தலைவனா? அரசியல் ஒரு மக்கள் சேவை என்று நினைப்பவன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் "போராட்டம் மட்டுமே தீர்வு அல்ல, அரசு மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதல்ல. நாமும் களத்தில் இறங்கி பிரச்சனைக்கு நம்மால் முடிந்த தீர்வு தேட வேண்டும். அது தானே ஆரோக்கியமான அரசியல் தலைமை செய்யும் காரியம்".

இன்று கூட ரஜினி அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள் 10பேருக்கு வீடு வழங்கியுள்ளார். தன் மட்டத்தில் தன்னால் முடிந்ததைச் செய்யும் ரஜினி இப்போ அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்ன? இல்லை 6 மாதம் கழித்து ஆரம்பித்தால் என்ன? களத்தில் மக்கள் பிரச்சனைக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.

எனவே ரஜினி அவர்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது விசயமே இல்லை. களத்தில் மக்கள் சேவையில் என்னவாக அவர் மன்றம் செயல்படுகிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில் மிகச் சிறந்த வகையில் மக்கள் சேவை செய்ய தன் தொண்டர்களை வழிகாட்டியுள்ள ரஜினி சரியாகவே செல்கிறார். இந்த விதமான ஆரோக்கியமான அரசியலை நோக்கிச் செல்லும் ரஜினி முதல்வராக வேண்டும்.

எந்நேரமும் எதிர்மறை சிந்தனையைத் தூண்டி விடும் எதிர்மறை அரசியலைப் பார்த்துவிட்ட நமக்கு ஒரு நேர்மையான அரசியலை பார்க்க ஏற்க மனம் இல்லை என்றால் இழப்பு மக்களாகிய நமக்குத் தான். யார் எதிர்மறையான அரசியல் செய்யத் துடிக்கிறார்களோ அவர்களால் மக்களுக்கு நன்மை நடப்பதை விட நேர்மை எண்ணத்தோடு தீர்வு தேடும் ரஜினி போன்ற மனிதர்களால் தான் ஒரு ஆரோக்கியமான சூழலை மக்கள் வாழ்வதற்கு உருவாக்க முடியும். ஒரு நல்ல மனிதரை முதல்வராக கொண்டு வந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவது இன்றய தேதியில் நம் கடமை’’ என அவர் தெரிவித்துள்ளார்.