தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினும் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் நேரில் சந்தித்துக்கொண்டனர். 

திமுக இளைஞரணி துணை செயலாளரும் திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், தன்னை செயல்படாத தலைவர் என விமர்சித்த முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார். நான் வேண்டுமானால் செயல்படாத தலைவராக இருந்துவிட்டு போகிறேன். ஆனால் அவரைப்போல் எடுபிடி முதல்வராக இருக்கமாட்டேன் என கடுமையாக பதிலடி கொடுத்தார். 

இந்த திருமண நிகழ்ச்சிக்கு அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும் சசிகலாவின் சகோதரருமான திவாகரனும் வந்திருந்தார். இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி ஒருவரையொருவர் நலம் விசாரித்து கொண்டனர். 

இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய திவாகரன், ஸ்டாலின் திருமணத்திற்கு வருவது தமக்கு தெரியாது என தெரிவித்தார். அதனால் இந்த சந்திப்பு தற்செயலான சந்திப்பு என்றும் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தினகரன் தொடங்கியதிலிருந்து தினகரனுக்கும் திவாகரனுக்கும் மோதல் வெடித்தது. தினகரன் தொடங்கிய இயக்கத்தின் பெயரில் அண்ணா, திராவிடம் ஆகிய வார்த்தைகள் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார் திவாகரன். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று பதிலடி கொடுத்தார் தினகரன். அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் எதிரொலியாக சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என திவாகரனுக்கு சசிகலா சார்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அண்ணா திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை திவாகரன் தொடங்கி நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

தினகரன் திவாகரன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஸ்டாலின் திவகாரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.