விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதி அளித்துள்ள அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையே விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை என்று அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அதிமுக அரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருப்பதையும், தமிழகத்தில் அவர்களின் எடுபிடியாக அதிமுக அரசு நடப்பதையும்  பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைக்க விஸ்வ இந்து பரிஷத் முயற்சிப்பது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு  எனவும் “சட்டத்தின் ஆட்சி” என்பது தங்களுக்குப் பொருந்தாது என்ற அராஜக மனப்பான்மையுடன் இந்துத்துவா அமைப்புகளை செயல்பட விடுவது நாட்டிற்கு நல்லதல்ல எனவும் சாடியுள்ளார். 

ஆகவே, விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் “ரத யாத்திரையை” தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் உடனடியாக அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால் தமிழகத்தின் எல்லையிலேயே அவர்களை கைது செய்து உத்தரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.