கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இறந்த பிறகும் போராடி வென்றுவிட்டார் கருணாநிதி. 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய, திமுக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த தமிழக அரசு, காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கியது. 

இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நேற்றிரவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், இந்த விவகாரத்தில் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு இன்று காலை 8 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

இன்று தலைமை நீதிபதி(பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதிட்டனர். வாதங்கள் பரபரப்பாக நடந்தன.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்கரையில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, திமுகவிற்கு சாதகமான போக்கு உருவானது. இதனால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதில் தமிழக அரசை தவிர மற்ற எந்த எதிர்ப்பும் இல்லாத சூழல் உருவானது. 

இதையடுத்து, மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்ற தலைமை செயலாளரின் அறிக்கைக்கு எதிராக திமுக வழக்கு தொடர முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு, திராவிட சித்தாந்தம் வேறு; எனவே கருணாநிதியின் சித்தாந்தத்தின் அடிப்படையில், மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டர். அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது? என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். 

மேலும் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யாவிட்டால், அது நல்லடக்கமாக இருக்காது. 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான வழக்குகளை திமுக வாபஸ் பெற வைத்துள்ளது என வாதிட்டார். 

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு நீதிமன்றத்தில் இருந்த திமுக வழக்கறிஞர்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

வழக்கறிஞர்களை அமைதி காக்கும்படி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். பின்னர், மெரினாவில் நினைவிடங்கள் அமைப்பதற்கு தெரிவித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்க அரசுக்கு என்ன தடை? என நீதிபதி சுந்தர் கேள்வி எழுப்பினார். மேலும் ராஜாஜி, காமராஜர் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்தார். 

சட்ட சிக்கல், வழக்குகள் நிலுவை ஆகியவற்றை காரணம் காட்டி மெரினாவில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க தடை கோரி தொடரப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறிவிட்டு அதற்கு முரணாக வாதாடுகிறீர்கள் என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதி கருத்து தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. 

நீதிமன்ற தீர்ப்பை அறிந்ததும் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடிவருகின்றனர். இறந்தபிறகும் போராடி வென்றுள்ளார் கருணாநிதி..

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, மகிழ்ச்சியில் ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார்.