திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார். அதிமுகவிற்குதான் வரம் கொடுக்க போகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  அதிமுகக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார். இன்று 2வது நாளாக கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, காலையில் புலியகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசியதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அதிமுகவுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார். 

மு.க.ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டால், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர அடித்தளம் போட்டது அதிமுக அரசு. ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்று; உள்ளே இருப்பது வேறு ஒன்று. மேலும், தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவித்தது அதிமுக தான். எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம், அவரவர் மதம் , கடவுள் அவவரவர்களுக்கு புனிதமானது. சிறுபான்மை மக்களின் நலனை நாங்கள் காப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.