காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும் எனவும் போலீசார்  வருகைப் பதிவேட்டில் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் எனவும்   தமிழக டிஜிபி ஜெ.கே திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், "காவல் துறை" என இடம்பெற்றிருக்க வேண்டும். காவல்துறையில் கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்" என திரிபாதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிஜிபி திரிபாதியின் இந்த உத்தரவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிடுகையில்,


"தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!" என தெரிவித்துள்ளார்.