சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  .  கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  

பள்ளிக்கரணை  பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டு திருமணத்துக்காக அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த பேனர் சரிந்நதால்தான் சுபஸ்ரீ உயிரிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் சுபஸ்ரீ உயிரிழந்து மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது.

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை சுபஸ்ரீயின் வாழ்கையை காவு வாங்கியுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.