டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம், நெடுவாசலில் நடைபெறும் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என வாழ்வாதாரத்துக்காக போராடும் மக்களை அழைத்துப்பேசும் தகுதி பிரதமருக்கு இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கதிராமங்கலம் பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி 72 நாட்களாக போராடி வரும் பொது மக்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள போராட்ட மக்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின், கதிராமங்கலம் போராட்டத்தை பெண்கள் கையில் எடுத்துள்ளதால் அது மகத்தான வெற்றியைப் பெறும் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியின்போது அப்பகுதி நிலங்களை குத்தகைக்கு விட்டது அதிமுக ஆட்சியின்போது தான் என குற்றம்சாட்டினார்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், நெடுவாசல் போராட்டத்தில் உள்ள பொது மக்கள், கதிராமங்கலம் போராட்ட மக்கள் என இவர்களை பிரதமர் மோடி ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம், நெடுவாசலில் நடைபெறும் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என வாழ்வாதாரத்துக்காக போராடும் மக்களை அழைத்துப் பேசும் தகுதி பிரதமருக்கு இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.