ஏரி, குளங்களை தூர் வாரும் விஷயத்தில் கோடி கோடியாக கொள்ளையடிப்பவே அரசின் திட்டமாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மவாட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை திமுக சார்பில் அக்கட்சி செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குளங்கள், ஏரிகள், ஆறுகள் இயற்கையின் சொத்துக்கள். அதனை காப்பற்ற வேண்டியது, நமது கடமை. அதனால், ஏரி மற்றும் குளங்களை தூர் வாரும் பணிகளை திமுக கொள்கையாக கொண்டு அதனை பாதுகாக்க தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த வேலைகளை தமிழக அரசு பொறுப்பேற்று செய்ய வேண்டும். இது அரசின் கடமை. அரசின் பணி. ஆனால், இந்த பணிகளை செய்ய அரசு தவறிவிட்டது. தமிழக அரசு இந்த பணியை செய்ய தவறியதால், திமுகவே முன்னின்று ஆளுங்கட்சியை போல் அந்த பணிகளை செய்து வருகிறது.

திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்காக இல்லாமல், மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அந்த பணிகளை நிறைவுடன் செய்துவருகிறது.

இந்த குதிரை பேர அதிமுக ஆட்சியில், அரசு சார்பில் ஏரி, குளங்களை தூர் வாருவதாகக அறிக்கை விடப்பட்டது. இதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டு சென்று அணையை தூர் வாருவதாக தொடங்கி வைத்தார்.

இதற்காக பத்திரிகைகள், ஊடகங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தார். அந்த பணி எந்த நிலையில் தற்போது இருக்கிறது என மக்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தூர் வாரும் பணியை மாவட்டம், ஒன்றியம், கிளை வாரியாக பிரித்து கொடுத்துள்ளதாக கூறினார். இதை பிரித்து கொடுத்தது, வேலை செய்வதற்காக அல்ல. கோடி கோடியாக கமிஷன் பெறுவதற்கும் கொள்ளையடிக்கவும் தூர் வாரும் பணிகளை பிரித்து கொடுத்துள்ளது.