ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரி கைது செய்யப்பட்ட வாலிபர்களை விடுதலை செய்யக்கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தப்பட்ட வாலிபர்களை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என டிஜிபியிடம் மனு கொடுக்க வந்தேன். ஆனால், அவர் இல்லை. அதனால், டிஎஸ்பி தரத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வாலிபர்கள் போராட்டம் நடத்தியதற்காக தடியடி நடத்தி, கைது செய்து, சிறை வைக்கப்பட்டுள்ளனர். இது மோசமான சூழ்நிலையில் உள்ளது.

போராட்டம் நடத்த வந்த வாலிபர்களுக்கு, உள்ளூர் மக்கள், உணவு பொட்டலங்கள் கொடுக்க வந்தனர். அதையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தை மாதம் முடிவதற்குள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும்.

அலங்காநல்லூரில் நடந்த தடியடி, கைது சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக மக்களின் பாரம்பரியத்தை முடக்க செய்யும், தமிழர்களின் உணர்ச்சிகளை தடுக்கும் பீட்டா அமைப்பை முழுவதமாக தடை செய்ய வேண்டும் என நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு முறை சென்னை வரும்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம், நிச்சயம் நடக்கும், கண்டிப்பாக நடக்கும் என உறுதியளித்தார். தற்போது அவர், ஜல்லிக்கட்டு நடக்காமல் போனத்தற்கு மன்னிக்கவும் என கூறியுள்ளார். அவர் இத்துடன் இதை முடித்துவிட கூடாது. இதற்காக முயற்சித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் அசாதாரண நிலையில் உள்ளது என கூறியுள்ளரே என கேட்டதற்கு, “ரஜினி சொன்ன பிறகுதான் உங்களுக்கு, தமிழகம் அசாதாரண நிலை இருப்பது தெரிகிறதா..?” என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.