Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் மாளிகையா? இல்ல.. தலைமைச் செயலகமா? ஸ்டாலின் கேட்பதன் பின்னணி என்ன? 

stalin claim is this move for implement governor rule in tn by appointing additional secretary
stalin claim is this move for implement governor rule in tn by appointing additional secretary
Author
First Published Nov 30, 2017, 3:09 PM IST


தமிழகத்தில் இருப்பது ஆளுநர் மாளிகையா அல்லது இன்னொரு தலைமைச் செயலகமா என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலராக ராஜகோபால் நியமிக்கப் பட்டதன் பேரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். அவரது சந்தேகத்தை மேலும் கிளறுவது போல் அமைந்தது, ஆர்.ராஜகோபால் நியமிக்கப் பட்ட விவகாரம்.

தமிழகத்தில் ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக்கி இரட்டை ஆட்சி நடத்தும் நோக்கம், நாளடைவில் ஆளுநர் மாளிகையின் ஒற்றை ஆட்சிக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாகக் கூறியுள்ளார் ஸ்டாலின்.   

மேலும் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் நடைபெறும் நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதிகாரிகளை அழைத்து நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துவது தவறு என்று சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின்,  இத்தகைய ஆலோசனைகள் தொடரும் என ஆளுநர் கூறும் நிலையில், தங்களின் அதிகாரத்தில் எப்படி தலையிடலாம் எனக் கேட்கவேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநருக்கு வெண்சாமரம் சுழற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

 

இதன்விளைவாகத்தான், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் ஆலோசகராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ராஜகோபாலை, தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமித்து, மாநில அரசுப் பணிக்குத் திரும்பச் செய்திருக்கிறார்கள். இதில் உள்நோக்கம் உள்ளதாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை இன்னொரு தலைமைச் செயலகமாக உருவாக்கி, இரட்டையாட்சி நடத்தும் நோக்கமே ராஜகோபால் நியமனத்தில் வெளிப்படுகிறது. நாளடைவில் இரட்டையாட்சி என்பது ஆளுநர் மாளிகையின் ஒற்றையாட்சியாக மாற்றப்படும் திட்டம் உள்ளதோ என்ற அச்சமும் ஐயமும் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

யார் இந்த ராஜகோபால், என்று பார்த்தால், ஒரு காலத்தில்  முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் பந்தாடப் பட்டவர் என்ற ஒற்றைச் சொல்லில் நிறுத்தி விடுவார்கள் விவரம் அறிந்தவர்கள். அது ஏன் என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே உள்ளர்த்தம் சொல்லும். 

stalin claim is this move for implement governor rule in tn by appointing additional secretary

அதுமட்டுமல்ல, அவர் உள்துறைச் செயலராக இருந்த போது, எதிர்க்கட்சியில் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர் என்று ஜெயலலிதாவிடம் கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகளை முன்கூட்டியே ஸ்டாலினிடம் கசியவிட்டவர் என்றும் கூறப்பட்டது. அந்தக் காரணத்தாலேயே ராஜகோபாலை கடைசி வரை கோபத்தில் ஒதுக்கியே வைத்திருந்தார் ஜெயலலிதா. 

இப்போது, ராஜகோபாலின் பணி நியமனத்தை முதல் ஆளாக எதிர்க்கிறார் மு.க.ஸ்டாலின். 

அப்படியென்றால் யார் இந்த ஆர்.ராஜகோபால்? நாமும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
 
தமிழக ஆளுநரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா 2013ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் தற்போது மாற்றப்பட்டு, புதிய செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

தமிழகத்தைச் சேர்ந்த இவர், 1984ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் பயின்றவர். இவரது மனைவி மீனாட்சியும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான்! இவர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையராக பணியாற்றுகிறார்.

ராஜகோபால், 1990களின் இறுதியில் கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.  தமிழக சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலத்துறை, சிமெண்ட் கார்ப்பரேஷன், வேளாண்மைத்துறை, திட்டக்குழு, கலால் துறை, காதி மற்றும் கைத்தறித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைச் செயலர், செயலாளராக பணி செய்துள்ளார்.

2014 பிப்ரவரி 6-ம் தேதி முதல் டெபுடேஷனில் மத்திய அரசுப் பணிக்கு சென்றவர், தற்போது தமிழ்நாடு ஆளுனரின் செயலாளராக மீண்டும் தமிழக பணிக்கு திரும்பியுள்ளார். 

இவருக்கு மாநில தலைமைச் செயலாளருக்கு இணையாக, இவரது தகுதி மற்றும் கடமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதாக அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது, பல்வேறு சர்ச்சைகளையும் அனுமானங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தப் பின்னணியிலேயே, ஸ்டாலினும் ஒரு கருத்தைப் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார். ஒருவேளை தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அச்சாரம் இடுகிறார்களோ என்ற ஐயப்பாட்டையும் விதைத்தபடி! 

Follow Us:
Download App:
  • android
  • ios