திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கார் ஓட்டுநராக இருந்த பாலு, அதிரடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினின் கார் ஓட்டுநராக பாலு என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு எதிராக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டு இருந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஸ்டாலினின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஸ்டாலினின் நடவடிக்கைகள் உளவுப்பிரிவினருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. இதையடுத்து தனது நடவடிக்கைகள் உளவுப்பிரிவுக்கு எப்படி தெரிகிறது என யோசித்த ஸ்டாலின், இதுதொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். 

அதில், ஓட்டுநர் பாலு மூலமாகவே ஸ்டாலினின் செயல்பாடுகள் உளவுப்பிரிவுக்கு தெரிகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாலுவை ஓட்டுநர் பணியிலிருந்து ஸ்டாலின் அதிரடியாக நீக்கியுள்ளார். ஏற்கனவே பாலுவை பிடிக்காத மற்றும் பாலு மீது அதிருப்தியில் இருந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஓட்டுநர் பாலுவின் நீக்கத்தை கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கனவே கட்சியில் அதிரடியாக களையெடுப்புகளை மேற்கொண்டுவருகிறார் ஸ்டாலின். இந்நிலையில், ஓட்டுநரும் நீக்கப்பட்டுள்ளார். ஓட்டுநரே ஸ்டாலின் குறித்த தகவல்களை உளவுத்துறைக்கு தெரிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவினரிடையே இத்தகவல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.