தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதிமுக, திமுக ஆகிய 2 பிரதான கட்சிகளும் கூட்டணியை உறுதிசெய்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி, பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றன.

அந்தவகையில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக மாநாடு திருச்சி சிறுகனூரில் நடந்தது. அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். மே 2ம் தேதி தமிழகத்திற்கான புதிய விடியல் பிறக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் முக்கியமான 7 துறைகளை வளர்த்தெடுப்பதே திமுக ஆட்சியின் நோக்கமாக இருக்கும்.

கல்வி, சுகாதாரத்திற்கு இதுவரை செலவிடப்பட்டு வரும் நிதி 3 மடங்கு உயர்த்தப்படும். சமூகநீதி, சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு ஆகிய துறைகளை வளர்த்தெடுப்பதுதான் திமுக ஆட்சியின் நோக்கமாக இருக்கும்.