காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற இலக்குடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக செயல்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் காங்கிரஸை ஆட்சியமைக்க விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதற்கேற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பாஜக ஈடுபட்டுவருகிறது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியமைக்க விடாமல் கூட்டணி அமைத்துள்ளது பாஜக. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, இமாச்சல பிரதேசம், குஜராத், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து என பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவும் பாஜக கூட்டணியும் ஆட்சியமைத்துள்ளது.

இந்த சூழலில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் பெரிதும் நம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாவது அணி முன்னெடுப்பு பணி தொடங்கியுள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்னெடுப்பிற்கு மம்தா, ஓவைசி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கு மம்தா அழைப்பு விடுத்திருந்தார். மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மம்தா ஆதரவு கோரினார்.

மம்தாவின் அழைப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மூன்றாவது அணியில் இணைய திமுகவிற்கு மம்தா அழைப்பு விடுத்தார். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் விவாதித்துவிட்டு தேர்தல் நேரத்தில் சொல்வதாக மம்தாவிடம் தெரிவித்தேன் என ஸ்டாலின் கூறினார்.