கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது அக்கா மகன் முரசொலி மாறன். எம்.பி., மத்தியமச்சர் என்று பதவிகளை வகிக்கும் முன்பாக கருணாநிதியின் நாற்காலிக்கு பின் அமர்ந்து கட்சியின் நிர்வாகத்தில் பெரும் உதவி புரிந்தார். கழகத்தில் தப்பு செய்யும் நிர்வாகிகள் இவரது பார்வையிலிருந்து தப்பியதே இல்லை. முரசொலி மாறன் சுட்டிக்காடிய நிர்வாகிகளை கட்டங்கட்டி தூக்கிவிட கருணாநிதியும் ஒரு நாளும் தயங்கியதில்லை. அதனால் மாறனைக் கண்டால் மண்டை காயும் நிர்வாகிகளுக்கு. இப்படியொரு பொசிஸனைத்தான்  தனக்கு கடந்த சில வருடங்களாக எதிர்பார்க்கிறார் ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன்.  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தைக் கேட்டு அரசியல் செய்து கொண்டிருந்த தி.மு.க.வின் ஸ்டைலை கார்ப்பரேட் ஸ்டைலில் மாற்றியது இவரது கைவண்ணமே. துவக்கத்தில் ஓ.எம்.ஜி. சுனில் இப்போது ஐபேக் பிரஷாந்த் கிஷோர் என இரண்டு அரசியல் கன்சல்டண்டுகளை கட்சிக்குள் வளர்த்துவிடுவது சபரிதான். 

சபரீசன் சொல்வது போல் வேஷ்டி சட்டையிலிருந்து ஜீன்ஸ், டீ சர்ட்டுக்கு மாறினார் ஸ்டாலின். உருவ மாற்றத்துக்கு ஒத்துழைக்கும் அவர், உள்ள மாற்றத்துக்கு ஒத்துழைப்பது இல்லை என்பதுதான் சபரீசனின் வருத்தமே. சமீபத்தில் தி.மு.க.வின் அவசர செயற்குழுவை கூட்டினார் ஸ்டாலின். அதில் ’நீங்கள் செய்துள்ள தவறுகள் எனக்கு தெரியாது என நினைக்காதீர்கள். எல்லாம் தெரியும். கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட சரிவால்தான் கடந்த முறை ஆட்சி வாய்ப்பை இழந்தோம். இந்த உள்ளாட்சி தேர்தலிலும் அங்குதான் நமக்கு பெரும் சரிவு. எனவே அதிரடி ஆபரேஷனை கொங்கிலிருந்தே துவங்குகிறேன் இன்னும் ஓரிரு நாட்களில்!” என்றார். இப்படி ஸ்டாலின் எச்சரித்து ஒருவாரமாகிவிட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்தான் சபரீசனும், உதயநிதியும் ஸ்டாலின் மீது கடுப்பாகினர். 

ஒரு கட்டத்தில் அவர் மீது வாக்குவாத பாய்ச்சலையே காட்டிவிட்டனர். “சர்வாதிகாரியாவேன், நடவடிக்கை எடுப்பேன் அப்படின்னு மிரட்டும் தொனியில் பேசுறீங்களே தவிர செயலில் காட்ட மாட்டேங்றீங்கப்பா. இந்த செயற்குழு முடிந்த கையோடு கொங்கு மண்டலத்தில் தவறு செய்த நாலஞ்சு முக்கிய நபர்களை பதவியை விட்டு எடுத்திருக்கணும் நீங்க. அப்பதான் கட்சி நிர்வாகிகளுக்கு உங்க மேலே பயம் வரும். தப்பு செய்ய பயப்படுவாங்க, ஆளுங்கட்சி கூட கூட்டு வைக்க நடுங்குவாங்க. ஆனால் நீங்க வெறுமனே பேசிட்டு, நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் குஷியா ரகசிய கூட்டு வைப்பாங்க. எங்கே நடவடிக்கை எடுத்தால் கட்சியிலிருந்து நிர்வாகிகள் எஸ்கேப் ஆகிடுவாங்கன்னு பயப்படுறீங்களாப்பா? இவங்களையெல்லாம் வெச்சுகிட்டு தோற்பதை விட,  நல்லவங்க நாலு பேரை வெச்சுகிட்டு ஜெயிக்க முயற்சிப்போம்.” என்று நறுக்கென சொல்லியிருக்கிறார்கள். ஸ்டாலின் மாறுகிறாரான்னு பார்ப்போம்!