stalin and ttv dinakaran join hand together against edappadi and ops

சுயேட்சை வேட்பாளரான தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுமார் தொண்ணூறாயிரம் வாக்குகளை நெருக்கிப் பெற்று வென்றிருப்பது ஒரு ஆச்சரியமென்றால், இந்த தேர்தல் சில அதிர்ச்சிகளையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. 

அதில் முக்கியமானது தி.மு.க.வின் படுதோல்வி. டெபாசீட்டை இழந்திருக்கிறது தி.மு.க. இது அதிர்ச்சியில்லை. ஆனால் இந்த பெருந்தோல்வியை ஏற்கனவே எதிர்பார்த்தது போலவே ஸ்டாலினின் ரியாக்‌ஷன் இருப்பதுதான் பேரதிர்ச்சி. 
ஆக விமர்சகர்கள் யூகிப்பது போல் தினகரன் வெல்ல வேண்டும் எனும் எண்ணத்திலேயேதான் ஸ்டாலின் இந்த தேர்தலை விட்டுப் பிடித்திருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை, ஸ்டாலின் வெறும் 3 நாட்கள்தான் ஒப்புக்கு பிரச்சாரம் செய்தார், ஐந்து காசு கூட ஓட்டுக்கு கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இதையெல்லாம் கவனித்த அரசியல் விமர்சகர்கள் ‘தி.மு.க. இப்படி அலட்சியமாய் இருக்கும் காரணமென்ன?’ என்று கேள்வி எழுப்பினர். 

நமது ஏஸியாநெட் தமிழ் இணைய தளம் கூட ‘இடைத்தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் தி.மு.க.’ எனும் தலைப்பில் தனி கட்டுரை வெளியிட்டிருந்தது. 
இந்நிலையில் தேர்தலின் முடிவு இதையேதான் பிரதிபலிக்கிறது. முடிவை தொட்டு பேசும் அரசியல் விமர்சகர்கள் ‘ தினகரனுக்கு மறைமுக ஆதரவை தரும் நோக்கத்தில்தான் ஸ்டாலின் இந்த தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து வாங்கிய ஓட்டுக்களைக் கூட இந்த முறை தி.மு.க. வாங்காததன் மர்மம் என்ன? அப்படியானால் ஏதோ ஒரு உள் குத்து மிகப்பெரிதாக நடந்திருக்கிறது. 

வீரியமாய் பிரச்சாரம் செய்யாமல், அதே பிரச்சாரத்தில் தினகரனை முந்த விட்டு கைகட்டி வேடிக்கை பார்த்தது தி.மு.க. இதன் காரணம் இப்போதுதான் புரிகிறது. 
அதாவது இந்த தேர்தலில் ஜெயிப்பதன் மூலம் தி.மு.க.வுக்கு கிடைக்கின்ற பலன் என்று எதுவும் பெரிதாயில்லை. தங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. அதிகம் கிடைப்பார் அவ்வளவே. தோற்றாலும் எதுவும் ஆகிவிடாது. 

ஆனால் அ.தி.மு.க.விலிருந்து விரட்டப்பட்டு, அக்கட்சிக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டிருக்கும் தினகரன் ஜெயிக்க துணைபுரிந்தால் அது இந்த அ.தி.மு.க. ஆட்சியை அசிங்கப்படுத்தும் செயலல்லவா? ஏற்கனவே மைனாரிட்டியாய் சரிந்து கிடக்கும் அரசை குப்புற தள்ளி அதன் முதுகில் ஏறி மிதிக்கும் செயலல்லவா இது! 

இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. எனும் பெயரும் காலாவதியாகிவிட்டது என்பதை உணர்த்த வைக்கும் வாய்ப்பல்லாவா இது! அதனால்தான் தினகரனுக்கு மறைமுக ஆதரவில் இருந்திருக்கிறது தி.மு.க. 

தினகரனின் மெகா வெற்றியின் மூலம் மக்களை ஆளுகின்ற தார்மீக உரிமையையும் இழந்து தலைகுப்புற கவிந்திருக்கிறது மைனாரிட்டி அ.தி.மு.க. அரசு. இதைத்தானே ஸ்டாலின் எதிர்பார்த்தார்!

கடந்த சில வாரங்களாய் ‘இன்னும் 3 மாதங்களில் இந்த அரசு கவிழும்’ என்று பேசி வருகிறார் ஸ்டாலின். அதையேதான் இப்போது தினகரனும் பேசுகிறார். ‘இன்னும் 3 மாதங்களில் ஆட்சி கவிழும்’ என்று இவரும் பேசியிருப்பதன் மூலம் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரியை புரிந்து கொள்ளுங்கள்.’ என்கிறார்கள். 

என்ன கெமிஸ்ட்ரியோ, ஜியாகிரபியோ போங்கள்!