எலியும் பூனையுமாக இருதுருவங்களாக இருந்த அழகிரியும் , மு.க.ஸ்டாலினும் இன்று கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்பு சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர் . இதில் திமுகவின் தலைமை மற்றும் அழகிரியின் கட்சிப்பதவி , கட்சியில் இணைப்பு குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி , மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி திமுகவில் முக்கிய இடத்தில் உள்ளனர். அழகிரி தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்தார் இதில் கட்சியின் துணைபொதுச்செயலாளராக இருந்த ஸ்டாலினுடன் மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மோதல் பெரிதாகி கட்சித்தலைவர் கருணாநிதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும் தலைமைக்கு எதிராக பேசியதாலும் , அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் தனது அரசியல் வாரிசு என மு.க.ஸ்டாலினை கருணாநிதி அறிவித்தார். ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் ஆனார். அதன் பின்னர் கட்சி முழுதும் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வந்தது. 2014 பாராளுமன்ற தேர்தல் ஸ்டாலின் வழிகாட்டுதலில் நடந்தது. இதில் கட்சி 5 எம்பிக்கள் கூட வெல்ல வாய்ப்பில்லை என அழகிரி பகீரங்கமாக ஸ்டாலினை விமர்சித்தார். இதனால் பிளவு பெரிதானது.

தந்தை கருணாநிதியை சந்திக்க கூட அழாகிரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் பின்னர் 2016 ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஓரளவு கட்சியை விமர்சித்த அழகிரி சற்று ஒதுங்கியே இருந்தார். தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக வலுவாக அமர்ந்த ஸ்டாலின் கட்சித்தலைவராக பதவி கேட்டு நெருக்கி வருகிறார்.
இந்நிலையில் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்த தந்தையை அழகிரி சந்தித்தார். உணர்ச்சிகரமான சந்திப்பில் தந்தை இறங்கி வந்தார். அமைதியாக கட்சிக்கு எதிராக பேசாமல் இருக்கும் படியும் இடைதேர்தலுக்கு பின்னர் கட்சியில் இணைக்க சொல்கிறேன் என தந்தை பச்சை கொடிக் காட்ட அழகிரி அமைதியாக இருந்தார்.
இதனிடையே கட்சிதலைமை பதவி கேட்டு ஸ்டாலின் நெருக்க அதற்கு ஓரளவு இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக நேற்று துரைமுருகன் பகீரங்கமாக அறிவிக்கும் சூழல் உருவானது.

இந்த நிலையில் இன்று காலை 11.45 மணி அளவில் மு.க.அழகிரி கோபாலபுரம் வந்தார், 12.10 க்கு பின்னாலேயே மு.க.ஸ்டாலினும் வந்தார். ஏற்கனவே கோபலாபுரத்தில் டி.ஆர்.பாலு , அ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் இருந்தனர் .
திமுக தலைவர் கருணாநிதி , முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்துள்ளது இதில் அழகிரி ஸ்டாலின் பேசிகொண்டனர். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைப்பது தென்மண்டல அமைப்புச்செயலாளர் பதவியை அளிப்பது என்று ஒத்துகொள்ளப்பட்டதாகவும் , மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் பதவி அல்லது அதற்கு ஈடாக பதவியும் வழங்கவும் ஒத்து கொள்ளப்பட்டுள்ளது.
தலைவர் , பொதுச்செயலாளர் இருவரும் ஓய்வு பெறும் எண்ணத்தில் உள்ளனராம். அப்படி ஒருவேலை நடந்தால் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படலாம். பொதுச்செயலாளராக துரை முருகன் , பொருளாளராக எ.வ.வேலு அல்லது ஐ.பெரிய சாமிக்கு வாய்ப்பு உள்ளதாக் கூறுகிறார்கள்.
அடுத்த மாதம் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் திமுகவில் வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
