கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தார்மீக அடிப்படையில் மெரீனாவில் இடம் ஒதுக்கக்கோரி முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதே, இன்று மாலை முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து, கருணாநிதியை அடக்கம் செய்ய மெரீனாவில் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். ஸ்டாலினுடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஆனால், மெரீனாவில் நல்லடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்கள் ஆகியவற்றை காரணம் காட்டி மெரீனாவில் அடக்கம் செய்ய அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது, திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தார்மீக அடிப்படையில் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமியிடம் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி அவர்களுக்குரிய மரியாதையுடனும் அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் சென்னை காமராஜர் சாலையில் அண்ணா நினைவிடம் இருக்கும் வளாகத்திற்குள் உடலை நல்லடக்கம் செய்துகொள்ள அனுமதி வழங்கிடுமாறு முதல்வரை வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்டாலின்.