Asianet News TamilAsianet News Tamil

ஆண்டாள் சர்ச்சை... அடம்பிடிக்கும் வைரமுத்து... உண்ணாவிரதத்தில் அமர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..!

srivilliputhur jeeyar is on hunger strike demanding apology from vairamuthtu on andal issue
srivilliputhur jeeyar is on hunger strike demanding apology from vairamuthtu on andal issue
Author
First Published Jan 17, 2018, 1:29 PM IST


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்த கவிஞர் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதி மக்கள் முதலில் போராட்டம் நடத்தினர். ஆனால், வைரமுத்து, தனது கருத்துகளால் எவர் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். அவரது வருத்தத்தை ஏற்க எவரும் தயாராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூருக்கே வந்து மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒருநாள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்களை சமாதானப் படுத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி டி.எஸ். ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் உறுதி அளித்தனர். அப்போது ஜீயர், வரும் 16ம் தேதி காணும் பொங்கல் நாள் வரை நேரம் அளிக்கிறோம். அதற்குள் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும், தவறும் பட்சத்தில் போராட்டம் வேறு விதமாகத் திரும்பும் என்று கூறியிருந்தார். 

ஆனால் வைரமுத்து வருத்தம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொண்டார். போராட்டம் மேற்கொள்பவர்கள் கோரிக்கையை ஏற்காமல் மௌனமாக இருந்துவருகிறார். இதனால் மேலும் வருத்தத்துக்கு உள்ளான ஜீயர் ஸ்வாமிகள் உள்ளிட்டோர் இன்று தாங்கள் அறிவித்த படி, உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இன்று காலை முதல் தொடர் உண்ணாவிரதம் தொடங்கினார். அவருக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் உள்ளூர் மக்களும் பக்தர்களும் உண்ணாவிரதத்தில் மடத்தில் அமர்ந்தனர். 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜீயருடன் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், டி.எஸ.பி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த ஜீயர், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று கூறினார்.  

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றிய பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios