மீன், இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் கவனமாக செயல்பட வேண்டும். தங்கு தடையின்றி மக்கள் வெளியில் செல்வதால் கொரோனா நோய் பரவலை இனி கண்டுபிடிப்பது சிரமம் உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பது தொடர்ந்து நீடிக்கும். மருத்துவ நிபுணர்கள், காவல்துறையினரின் செயல்பாட்டால் நோய் தொற்று குறைந்து வருகிறது.

குறிப்பாக சாதாரண நோயை கண்டறிய தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம் பெறுவர். முகக் கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க முடியாது என கூறியுள்ளார். மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டு என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.