கலைஞர் முதல்வராக அடம்பிடித்த எம்.ஜி.ஆர்! யாருக்கும் தெரியாத ஒரு கதை...
கருணாநிதி ஆயிரம் புத்தகங்கள் எழுதியிருக்கலாம். ஆனால் அவற்றிலெல்லாம் மிக முத்தாய்ப்பானது ‘நெஞ்சுக்கு நீதி’தான்.
கருணாநிதி ஆயிரம் புத்தகங்கள் எழுதியிருக்கலாம். ஆனால் அவற்றிலெல்லாம் மிக முத்தாய்ப்பானது ‘நெஞ்சுக்கு நீதி’தான். காரணம்?...திராவிட இயக்கங்கள் இந்த மண்ணில் கடந்து வந்த முள் படுக்கைகளையும், சமகால அரசியலில் கலைஞர் மீது வைக்கப்படும் மிக மோசமான விமர்சனங்களுக்கு ஆதாரத்துடனான மறுப்புகளையும், எம்.ஜி.ஆர். கலைஞரை எந்தளவுக்கு மதித்தார் என்பதையும் சாட்சியங்களுடன் எடுத்து வைக்கும் ஆவணம் அது.
அதில் ஒரு முக்கிய செய்தி வருகிறது. அதாவது கருணாநிதியை பிறவி அரசியல்வாதி! முதல்வர் பதவி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அண்ணாவுக்கு பின்னால் செயல்பட்டவர்! என்றெல்லாம் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சாட்டையடி பதில் அதில் வருகிறது.
அதாவது 1967-ல் தி.மு.க. துவக்கப்பட்டது, அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் அண்ணா இறந்துவிட்டார். அண்ணாவுக்குப் பின் யார் முதல்வராவது? என்பதில் குழப்பம். முன்வந்து முதல்வர் பதவியை ஏற்க கலைஞர் விரும்பவில்லை. ஆனால் பெரும்பான்மையோரின் விருப்பம் ‘கருணாநிதி’ என்றே இருந்தது. அப்படி விரும்பியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர்.
அவரே நேரில் வலியுறுத்தியபோதும் கருணாநிதி விரும்பவில்லை. பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகிய கழக சீனியர்களையும், அரசியல் ஆளுமைகளையும் தாண்டி தான் முதல்வராவதை கருணாநிதி ஒப்பவில்லை.
அதனால் தன் மருமகன் மாறனை விட்டு எம்.ஜி.ஆர். உள்ளிட்டோரிடம் ‘அவருக்கு முதல்வராகும் விருப்பமில்லை. தொல்லை செய்யாதீர்கள்’ என்று தகவல் சொல்லி அனுப்பினார். ஆனால் யாரும் விடுவதாயில்லை. ‘கட்சிக்காகவும், மக்களுக்காகவும் கலைஞர் இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்’ என்று பதில் சொல்லி அனுப்பினர்.
இந்த நிகழ்வுகளை 1.4.1969ல் ஆயிரம் விளக்கு பகுதியில், புதிய அமைச்சரவைக்கு பாராட்டு தெரிவித்து நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆரே. பேசியிருக்கிறார். இதுவும் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகத்தில் கலைஞர் எழுதியிருக்கிறார்.
கருணாநிதியே விரும்பாத முதல்வர் பதவியை, வர்புறுத்தி திணித்த எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் எதிர்கட்சி துவக்கி, அதே கலைஞரை பல ஆண்டுகள் முதல்வர் நாற்காலி பக்கமே வரவிடாமல் செய்த முரண்பாடும் நடந்தது.
ஆனால் ஆயிரம் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட இருவரும், எம்.ஜி.ஆரின் கடைசி காலம் வரையில் நல்ல நண்பர்களாகவே இருந்தனர் என்பதும் யதார்த்தம்.