ரஜினியின் ரசிகர்கள் தங்களின் தலைவரின் பராக்கிரமம் பற்றி அதிதீவரமான நம்பிக்கையில் இப்படித்தான் யோசித்துக் கொள்வார்கள், நம்பிக் கொள்வார்கள் என்று கலகல விஷயங்களை அதில் பதிவு செய்திருந்தது. 
அதன் சில துளிகள் இதோ...

‘விமானத்தில் சென்ற ரஜினிக்கு வியர்த்ததால், கதவை திறந்து வெளியேறி ஃப்ளைட்டின் காக்பிட்டில் உட்கார்ந்தபடி  காஃபி குடித்தார்! 

கோபத்தில் ரஜினி ஊதித்தள்ளிய ஒரு சிகரெட் கனல் பட்டுத்தான் இந்தோனேஷியாவில் எரிமலை!...’ 
இப்படியாக நீளும் அந்த பதிவு. 

என்னதான் சிரிப்பை தந்தாலும் கூட ஒரு கோணத்தில் யோசித்தால் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சினிமா ரஜினியை நாமெல்லாரும் அப்படித்தானே நம்பிக் கொண்டிருக்கிறோம். தோர், ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், பேட்மேன்...என ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்கள் எல்லோரையும், கோலிவுட்டின்  இந்த கறுப்பழகனுக்கு எட்டடி பின்னாடிதானே நிற்க வைத்தோம். 

ஆனால் வெள்ளித்திரையில் தெரியும் வரையில் ரஜினியின் புஜபலபராக்கிரம கெத்துக்கு குறையொன்றும் வரவில்லை. ஆனால் என்று அவர் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தாரோ, அன்று துவங்கியது அந்த பெருமைக்கான சேதாரம். அவரது ஹீரோயிஸங்களெல்லாம் பொதுவெளியில் விமர்சித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன கடந்த ஒரு வருட காலமாக. ’தலை சுத்திடுச்சு’ன்னு சொன்னாலும் தப்புங்கிறாங்க, ‘எந்த ஏழு பேர்?’ன்னு கேட்டாலும் தப்புங்கிறாங்க. 
சரி தலைவனாவது தன் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கும்படி பார்க்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஸ்டெர்லைட் கலவரத்தில் காயமுற்றவர்களைப் போய் நின்று ‘எதற்கெடுத்தாலும் போராடுனா நாடு சுடுகாடாகிடும்’ என்றார். அடுத்த இரண்டு நாட்களில் வெளியான காலா டீஸரில் ‘இந்த உடம்புதாம்லே நம்மோட ஆயுதம். மக்களை கூட்டுங்கலே போராடுவோம்’ என்று டயலாக் பேசுகிறார். இந்த முறை கைதட்டல் விழவில்லை, அவரது ஹீரோயிஸ கவசத்தின் மீது கல் விழுந்தது. 

அவருக்குப் பல நாட்களுக்குப் பின் அரசியல் பற்றி யோசிக்க துவங்கிய கமல் கட்சியும் துவங்கி, இதோ இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் தலைவனோ ‘கட்சி துவங்குவதற்கான பணிகள் என் அலுவலகத்தில் தினமும் நடக்குது’ என்று ஆறேழு மாதங்களாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். விளைவு, ‘இவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என்று காங்கிரஸ் கூட கிண்டலடிக்கும் நிலைக்கு ஆகிவிட்டார். கட்சி துவங்கும் முன்னேயே இத்தனை அடியென்றால், அதை துவக்கிய பின் நொடிக்கு நொடி எட்டு திக்குமிருந்தும் வரும் துரத்தல்களை எப்படி சமாளிக்கப்போகிறார் ரஜினி? இதை நினைத்தாலே அவருக்கு தலைசுத்துகிறது. 

இப்படி அடிக்கடி தலை சுற்றியதால்தான்  சிங்கப்பூர் வரை சென்று மருத்துவமனையில் சேர்ந்து  நீண்ட மருத்துவ சிகிச்சையின் மூலம் தப்பிப் பிழைத்து கரையேறினார் ரஜினி. அதன் பிறகு கபாலி, 2.0, காலா, பேட்ட என்று மனிதர் பிஸியாய் பின்னிப் பெடலெடுத்தார் நடிப்பில். பேட்ட டப்பிங்கே முடிந்துவிட்டது வரும் 9-ல் ஆல்பம் ரிலீஸ், அதற்குள் இந்த மாத இறுதியில் இந்தியாவின் பெரும் பட்ஜெட் படமான 2.0 ரிலீஸ். இந்த கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த தலைவனுக்கு திடீர் உடல்நலக்குறைவாகி இதோ மெடிக்கல் அப்சர்வேஷனில் இருக்கிறார் என்று தகவல்கள் தடதடக்கின்றன. ஆக எதிர்பாராத நேரத்தில் ஆரோக்கியம் அவரை முடக்குகிறது. ஏஸி செட்களில் பாதுகாப்பான முறையில் நடித்தபடி இருக்கும்போதே உடல்நலன் இப்படியாகிறதென்றால், அரசியல் களம் தூசி, வெயில், மழை, கோபம், பிரஷர், தோல்வி, விமர்சனம், கலவரம், வழக்குகள் என்று ஒரு யுத்தமாயிற்றே. அதில் தலைவர் தாங்குவாரா? என்று அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்போது யோசிக்க துவங்கிவிட்டனர். 

ரஜினியின் உடல்நலன் இப்படி ஆவதை கண்டு மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறது அவரது குடும்பம். சின்னதாக அவர் இருமினாலும் அப்செட் ஆகிறார்கள். தியானம், இமயமலை பயணம் என்று அவர் முன்பு போல் ஆன்மீக சுதந்திர பறவையாகவும் இருக்க முடியவில்லை, நினைத்தபடி நினைத்த சினிமாக்களிலும் கூட நடிக்க முடிவதில்லை! எல்லாவற்றிலும் குடும்பத்தின் மூக்கு உள் நுழைகிறதாம். இரண்டாவது மகளின் மறுமணம் குறித்த ஒரு இனம் புரியாத கவலையும் மனிதரை  லேசாக பதற வைத்திருக்கிறது. அவரது அரசியல் நிலைப்பாடுகளிலும் குடும்பத்தின் குறுக்கீடுகள் கவனத்தை சிதற வைக்கின்றனவாம். சொல்லப்போனால் பர்ஷனலாக தான் விரும்பியதை செய்ய முடியாமல் தடுக்கப்படுகிறார் சூப்பர் ஸ்டார்! என்று அவரது அண்ணன் தரப்பிலிருந்து ஆதங்க குரல்கள் கேட்கின்றன. 

இவ்வளவு பிரஷர் அழுத்தினாலும் ரஜினியும் அவரது ஒவ்வொரு ரசிகனும் இன்னமும் அந்த ஒற்றை வரி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது....’இந்த ரஜினி யானை இல்லை, குதிரை. விழுந்தா எழுந்து ஓடுவார்’ என்பதுதான். 
ஆனால் வயதான குதிரை!?