மதுரை 

மத்திய அரசை எதிர்த்து பேசி மக்களை நடுத்தெருவில் நிற்க வைப்பதற்கு பதிலாக நயமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதம் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தக்  கூட்டத்திற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இதில், எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, பெரியபுள்ளான், ஏ.கே.போஸ், மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், நிர்வாகிகள் நிலையூர் முருகன்,வழக்குரைஞர் ரமேஷ், வெற்றிவேல் உள்பட பலர் பங்கேற்றனர். 

இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "மத்திய அரசை எதிர்த்து பேசி மக்களை நடுத்தெருவில் நிற்க வைக்கப் போவதில்லை. நயமாக பேசினாலும் காரியத்தை சாதிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவேதான் பிரச்சனைகளை பொறுமையாக கையாளுகிறோம். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமையும். 

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தீர்வு கண்டதுபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் தீர்வு காண்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும்” என்று அவர் பேசினார்.