Speaker Dhanapal said that he would give a chance to speak at the Assembly.
சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு தருகிறேன் என சொன்ன சபாநாயகர் தனபால் இன்று பேச மறுப்பு தெரிவித்துவிட்டதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதனால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது.
இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக டிடிவி தினகரனுக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
அதனால் இன்று தொடங்கும் பேரவையில் தமது கோரிக்கைகள் குறித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் டிடிவி தினகரன் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சபாநாயகர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் அவை தொடங்கியது. அப்போது ஆர்.கே.நகர் கோரிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசவும் அனுமதி கோரியுள்ளார் டிடிவி.
ஆனால் சபாநாயகர் தனபால் டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலில் பேச அனுமதி தருவேன்னு சொன்னவர் பிறகு தர பார்க்கிறேன் என கூறுகிறார் என சபாநாயகர் மீது புகார் தெரிவித்தார்.
சபாநாயகர் வார்த்தை ஜாலத்தை கையாண்டுள்ளார் எனவும் எடப்பாடி அரசு விரைவில் வீட்டுக்கு போகும் எனவும் குறிப்பிட்டார்.
