ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அந்த அணியினர் எடப்பாடி தலைமையில் செயல்பட தொடங்கியது சில நாட்களில் டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்ததும், எடப்பாடி அணியில் இருந்த எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் டிடிவி.தினகரனுடன் இணைந்தனர். இதனால், அதிமுகவில் 3 அணிகளாக உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுகவுக்கான இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால், இரு அணிகளும் இணையும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என ஓ.பி.எஸ். தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரு அணிகளும் இணைவதற்கு சில இடையூறாக இருந்து, பிரச்சனைகளை செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுகவின் எதிர் அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள், எங்கள் சகோதரராகவே நினைத்து வருகிறோம். இரு அணிகளும் இணைவதில், சிலர் இடையூறாகவே இருந்து வருகின்றனர். அவர்கள் செய்யும் பிரச்சனைகளால், அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தையில் தடைகள் ஏற்பட்டு வருகின்றன என்றார்.