திமுகவை எதிர்த்து பேசினால் வழக்கு தொடுக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார்.
திமுகவை எதிர்த்து பேசினால் வழக்கு தொடுக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டியுள்ளார். கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்பான 59 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவையில் 42, சென்னையில் 7, சேலத்தில் 4, திருப்பூரில் 2 இடங்களில், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கேரளா ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்தில் என சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கணக்கில் வராத 84 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கைப்பேசி, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சிகளில் 34 இலட்சம் ரூபாய் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் காலை 6 மணி முதல் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது. 14 மணிநேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி, பணம் எதுவும் அதிகாரிகளால் கைபற்றப்படவில்லை என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தினமும் வாக்கிங் செல்லும்போது உடன் வந்தவர்கள் வீட்டிலும் சோதனை நடத்துகின்றனர்.

வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி, பணம் எதுவும் அதிகாரிகளால் கைபற்றப்படவில்லை. திமுகவின் ஐ.டி.விங் சார்பில் பல்வேறு ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டதாக போலியான, அதிகாரிகள் கையெப்பமிடாத செய்தி குறிப்பு ஒன்றை பரப்பி வருகிறார்கள். அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே நடந்த சோதனையிலும் ஏதும் கைப்பற்றபடவில்லை. ஆதார்கார்டு - 5, வாக்களார் அடையாள அட்டை - 2, பேன் கார்டு -1, எஸ்.பி.வேலுமணி bank book - 1 மற்றும் அவரது Nokia கைப்பேசி மட்டுமே கைபெற்றப்பட்டுள்ளன. என் மீது பதியப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அரசியல் காழ்புணர்ச்சியால் சோதனை நடைபெற்றது. வழக்கை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். திமுகவை எதிர்த்து பேசினால் வழக்கு தொடுக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.
