பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. 

இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   மேலும் அவர்களை விசாரணை நடத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வ்ரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது