சில நாட்களுக்கு முன்பு கலைஞர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறிய 24  மணி நேரம் முடிவதற்கு 20  நிமிடங்கள் முன்பாகவே அவருடைய உயிர் பிரிந்தது.
அதனால் தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

தலைமை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் இடம் தர முடியாது எனவும் அதற்க்கு பதிலாக, காமராஜர் நினைவகத்தில் இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து, திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் இப்போதே கலவரத்தில் ஈடுபட துவங்கிவிட்டனர். 

இந்நிலையில், திமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஜே. அன்பழகன், கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் இடம் கிடைக்கவில்லையென்றால் 
முதல்வர் எடப்பாடியின் வீடு முற்றுகையிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால், சேப்பாக்கம் பகுதி பதட்டத்துடன் காணப்படுகின்றது.