Soundarajan is very good and he is still protesting because he does not see the film yet

தமிழிசை சவுந்திரராஜன் ரொம்ப நல்லவங்க என்றும் அவர் இன்னும் முழுமையாக படத்தை பார்க்காததால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் எனவும் இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. 

தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை, ஜி.எஸ்.டி குறித்து தவறான கருத்துகளை பரப்புவதால் மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் எனவும் அதனால் எனக்கு அதிகாலை 4 மணிவரை தூங்கவிடாமல் தொடர்ந்து தொலைபேசியில் தன்னை அசிங்கமாக திட்டுகிறார்கள் எனவும் தெரிவித்தார். 

எதையும் தான் சமாளிப்பேன் எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது அநாகரீகமானது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழிசை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விஜயின் தந்தை எஸ். ஏ .சந்திரசேகர், தமிழிசை சவுந்திரராஜன் ரொம்ப நல்லவங்க என்றும் அவர் இன்னும் முழுமையாக படத்தை பார்க்காததால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.