சோபியா விவகாரத்தால் பா.ஜ.கவிற்க இந்திய அளவில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது அக்கட்சியின் மேலிடத்தை கடுமையாக கோபமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக என்று சோபியா விமானத்தில் வைத்து முழக்கமிட்டதுடன் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. அவர் மீது தமிழிசை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக முதலில் ஒரு தகவல் வெளியானது. இதனை அடுத்தே சோபியா கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரும் பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக என்று ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். 

இதனால் பா.ஜ.க.விற்கு எதிரான இந்த ஹேஸ்டேக் இந்தியா முழுவதும் டிரண்டானது. ஏன் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானிலும் கூட சோபியா விவகாரம் விவாதப்பொருள் ஆகியது. பாகிஸ்தானின் பிரபலமான பத்திரிகையாளரான ஹமித் மிர் கூட சோபியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதாவது தங்கள் நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற போது அதாவது முஷாரஃப் ஆட்சியில் கூட கருத்து கூறியதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்று ட்விட்டரில் அகமது மிர் தெரிவித்துள்ளார். 

ஆனால் ஜனநாயக ஆட்சி என்று கூறிக் கொள்ளும் மோடி அரசு ஒரு ஆராய்ச்சி மாணவியை முழக்கமிட்டார் என்பதற்காக கைது செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் பத்திரிகையாளரான மிர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த அகமது மிர்  பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மிக தீவிரமாக செயல்பட்டு வந்தவர். இதனால் இவர் இரண்டு முறை துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி உயிர் பிழைத்தவர்.  தற்போது வரை இவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் அகற்றப்படாமல் உள்ளன. 

இப்படி ஒரு பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் அளவிற்கு சோபிய விவகாரம் சென்றது உளவுத்துறை மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவலாக தரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆராய்ச்சி மாணவி என்று கூறிக் கொள்ளும் சோபியா தொடர்ந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களை ஆதரித்து ட்விட்டரில் எழுதி வந்தது தெரியவந்துள்ளது.

 

மேலும் சோபியாவின் உறவினர் ஒருவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் ஏறும் போதே தமிழிசைக்கு எதிராக கோஷமிட முடிவு செய்து சோபியா ட்விட்டரில் பதிவிட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோபியாவை டேமேஜ் செய்ய இவ்வளவு விஷயங்கள் இருந்தும் அதனை தமிழிசை செய்தியாளர் சந்திப்பின் போது பயன்படுத்தவில்லை என்கிற தகவலும் மேலிடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

வெறுமனே புகார் மட்டும் அளித்துவிட்டு சென்ற தமிழிசை சிறிது ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சோபியாவின் பின்புலத்தையும் வெளிப்படுத்தியிருந்தால் அவருக்கு ஆதரவாக உடனடியாக அரசியல் கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களும் வெகுண்டு எழுந்திருக்கமாட்டார்கள் என்று பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது. மேலும் பாசிச பா.ஜ.க. அரசு ஒழிக என்று சர்வதேச அளவில் ட்விட்டரில் டிரென்டானதை பா.ஜ.க. மேலிடத்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழிசை மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றே சொல்லப்படுகிறது. தற்போது இல்லை என்றாலும் கூட விரைவில் அவர் மீது பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று சில பேச்சு கமலாலய வட்டாரத்தில் றெக்கை கட்டி பறக்கிறது.