முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி, மக்களுக்கு நல்லாட்சி தருவார் என நடிகர் ரமேஷ்கண்ணா கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்றாலும், அடிக்கடி சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகை சரோஜாதேவி, நடிகர் ரமேஷ்கண்ணா, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, அனைத்து இந்து கூட்டியக்கத்தின் சார்பில் சிவசேனா மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய இந்து சத்ய சேனா தலைவர் எம்.வசந்தகுமார், பாரத் இந்து முன்னணியின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு உள்பட நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்
அப்போது நடிகர் ரமேஷ்கண்ணா, நிருபர்களிடம் கூறுகையில், இயக்குனர் சங்கம் சார்பில் நாங்கள் ஏற்கனவே இங்கு வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்ததைவிட இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய அறையை மாற்றம் செய்ய இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவும், சரோஜாதேவியும் ஒரே படத்தில் நடித்ததை நான் டாக்டர் ரிச்சர்டிடம் கூறியபோது அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்பி நல்லாட்சி தருவார் என்றார்.
