காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது முட்டாள்தனமான முடிவு என்று ப.சிதம்பரம் விமா்சித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்தாலும் அவ்வப்போது மத்திய அரசை விமர்சனம் செய்து குடும்பத்தினர் மூலமாக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) பாதுகாப்பை  நேற்று முன்தினம் மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றது. இதற்கு ப.சிதம்பரமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடா்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு மூா்க்கத்தனமானது முட்டாள்தனமானது. கடவுள் முதலில் எவரை அழிக்க நினைக்கிறாரோ, அவரை முதலில் முட்டாளாக்குவார் என்ற ஒரு சொல் வழக்கு உண்டு' என்று சிதம்பரம் கூறியுள்ளார். பாஜகவின் இந்த முடிவு அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 28 ஆண்டுகளாக எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தில் இருந்த சோனியா குடும்பத்தினருக்கு, இனி மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) 'இசட்-பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.