சென்னை, சோழிங்கநல்லூரில், ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சிக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் பேனர்களை மர்ம நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் வலுத்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக செயல் தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், காவிரி உரிமை மீட்பு பயணம் நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் கோவளம் அருகே ராணுவ தளவாட பொருட்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். 

பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, பிரதமர் மோடி தமிழகம் வரும் அன்று அனைவரும கருப்பு உடை அணிவோம் என்றும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள் என்றும் கூறியிருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது தமிழகமே கொதிப்பில் உள்ளது. 

இந்த நிலையில், தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடிக்கு, சோழிங்கநல்லூர் அருகே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்கள் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது.  சில பேனர்களில், கருப்பு மையால், காவிரி எங்கே? என எழுதப்பட்டுள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கருப்பு மை கொண்டு பூசப்பட்ட பேனர்கள் இன்று காலை அகற்றப்பட்டன. பின்னர் பிரதமர் மோடியை வரவேற்று புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.