ஐநா மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்த ஒரு சாதாரண கடிதத்தை வைத்துக்கொண்டு, ஐநா மன்றத்தில் பேச வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐநா மன்றம் அனுப்பிய அழைப்பு கடிதம் என கூறி திமுகாவினர் விளம்பரத்தில் ஈடுபட்டிருப்பது கேலிகூத்தாகியுள்ளது.
  
ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையத்தில் வரும் செப்டம்பர் மாதம் 9 ந்தேதி முதல்  27 ஆம் தேதி வரை, சமூக ,பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பாக  ஐநாவின் 42 வது அமர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் போரினால் பாதிக்கப்பட்ட இனமக்கள் தங்கள் இனத்திற்கு கிடைக்க வேண்டிய பொருளாதார, மற்றும் புனர்வாழ்வு தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை  அம்மன்றத்தில் முன்வைக்கவும், அதன் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு தங்கள் பிரச்சனைகளை கொண்டு செல்லவும்  அது ஒரு வாய்ப்பாக இருக்கும் . எனவே இந்த அமர்வில்  தங்களின் சொந்த செலவில் வந்து கலந்து கொள்ள விரும்பம் உள்ளவர்கள்  பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் கலந்து கொள்ள இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் பலர் செல்லும் நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலும் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த நிலையில் பங்கேற்க வருபவர்களுக்கான நிபந்தனைகள் குறித்து ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் இது அழைப்புக் கடிதம் அல்ல என்றும் பதிவு செய்யப்பட்ட கடிதமே என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் உரிமைக்கு குரல் கொடுக்க வருமாறு ஐநா மன்றமே எங்கள் தலைவரை அழைத்துள்ளது என்று  திமுகவினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். திமுகவின் இந்த பொய் பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்து உண்மையை தோலுரித்து காட்டி வருகின்றனர். ஒரு சாதாரண ரிஜிஸ்ட்ரேஷன் லெட்டரை வைத்துக்கொண்டு திமுகவுக்கு ஏன் இந்த வெட்டி பந்தா என்றும், இலங்கை தமிழர்கள் கொள்ளப்படும்போது வேடிக்கை பார்த்த ஸ்டாலின் ஐநா மன்றம் போய் பாவத்திற்கு பிராய்சித்தம் தேடப்போகிறாரா என்றும் ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர்.