Asianet News TamilAsianet News Tamil

அநீதி... சமூகநீதி மீட்கப்பட வேண்டும்... கொந்தளிக்கும் ராமதாஸ்..!

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், வேதியியல், தமிழ், பொருளியல், வரலாறு உள்ளிட்ட 7 பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் இடஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை சென்னை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், அந்த விதிமீறல்களை சரி செய்து சமூகநீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர, அவசரமாக நியமன ஆணைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

Social justice must be restored...ramadoss
Author
Tamil Nadu, First Published Feb 16, 2020, 2:54 PM IST

சமூகநீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர, அவசரமாக நியமன ஆணைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், வேதியியல், தமிழ், பொருளியல், வரலாறு உள்ளிட்ட 7 பாடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிப்பில் இடஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை சென்னை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், அந்த விதிமீறல்களை சரி செய்து சமூகநீதி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அவசர, அவசரமாக நியமன ஆணைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

Social justice must be restored...ramadoss

அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 20-ஆம் தேதியும், ஜனவரி 2-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வெளியிடப்பட்டன. இவற்றில் வேதியியல், தமிழ், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், அப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் பா.ம.க பலமுறை வலியுறுத்தியிருந்தது. நேரிலும் கோரிக்கை மனுவை ஆதாரங்களுடன் அளித்திருந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால், பா.ம.க. சுட்டிக் காட்டியிருந்த குறைகளையும், விதிமீறல்களையும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய தமிழ், பொருளியல், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களுக்கு இடஒதுக்கீட்டு விதிகளை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Social justice must be restored...ramadoss

ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரு கட்டங்களாக வெளியிடப்பட்ட நிலையில், முதல்கட்டமாக வெளியிடப்பட்ட வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியலில் விதிமீறல் நடந்திருப்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு விதிகளை தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி, வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்து புதிய தேர்வு பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனாலும் அதை ஏற்காமல், மேல்முறையீடு செய்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், அப்பாடத்திற்கான ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறது. வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கும் ஏதோ காரணங்களுக்காக பணி ஆணைகளை ஆசிரியர் வாரியம் வழங்கவில்லை. வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப் பட்டியல் எந்தெந்த காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதோ, அக்காரணங்கள் அனைத்தும் தமிழ், பொருளியல் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர் தேர்வுப்பட்டியலுக்கும் பொருந்தும். அவற்றை எதிர்த்தும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன.

அப்பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வுப்பட்டியல் மிகவும் தாமதமாக வந்ததால், வழக்கு தொடர்வது தாமதமாகி, தீர்ப்பு வருவதும் தாமதமாகியுள்ளது. தாமதமாக வந்தாலும், வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலைப் போலவே தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலும் ரத்து செய்யப்படுவது உறுதி. இது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் நன்றாக தெரியும். அத்தகையச் சூழலில் நீதிமன்றத் தீர்ப்புக்காக வாரியம் காத்திருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதது மட்டுமின்றி, வேதியியல் பாட ஆசிரியர் தீர்ப்புக்கு எதிராகவும் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சமூகநீதிக்கு எதிரானவை ஆகும்.

இதனால் வேதியியல் பாடத்தில் 34 பேர், தமிழ் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாற்று பாடத்தில் 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மொத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், இந்தப் பாடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். இது மிகப்பெரிய அநீதி இல்லையா?

Social justice must be restored...ramadoss

தமிழ்நாடு சமூகநீதிக்கு புகழ்பெற்றது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்சிகளும், இப்போது நடைபெறும் ஆட்சியும் சமூகநீதியை போற்றுபவை. ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் இதற்கு முன்பு வரை சமூகநீதிக்கு எதிரான செயல்கள் நடைபெற்றதில்லை. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இப்போதைய நிர்வாகம் மட்டும், பல முறை சுட்டிக்காட்டியும், சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள்வது ஏன்? என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்தப் போக்கால் பாதிக்கப்படுவது ஏழைக் குடும்பத்து மாணவர்கள் என்பதால் தான் இதை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதிக்கு எதிரான போக்கை கைவிட்டு, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை தமிழக அரசு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios