தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

கொரோனா பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது.  நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. அதேநேரத்தில் உயிரிழப்பும் உயர்ந்துள்ளது. குறிப்பாக இளம் வயதினர் உயிரையும் கொரோனா பறித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.  இன்று இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு 2000ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்;- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,667 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில், சேலம் மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை சேலம் மருத்துவமனையில் மொத்தம் 263 பேர் குணமடைந்துள்ளனர். சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 500 படுக்கை வசதி உள்ளது. 

மேலும், சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றார். நோயாளிகள் அதிகரிப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா நோயாளிகளை கவனமுடன் அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பபட்டுள்ளது.